மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் ஜனனதின நிகழ்வு

முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினை சேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஜனன தின நிகழ்வுகள் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டிலும் விபுலானந்தர் நூற்றாண்டுசபையின் ஒத்துழைப்புடனும் சுவாமி விபுலானந்தரின் 126வது ஜனன தின பிரதான நிகழ்வுகள் மட்டக்களப்பு நீருற்றுப்பூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி தவிசாளர் எஸ்.சத்தியசீலன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவருமான கே.பாஸ்கரன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி பிரபுபிரபானந்தஜி மகராஜ் கலந்துகொண்டு விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்ததுடன் அனைவுரும் சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

அத்துடன் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளின் விபுலானந்தர் இயற்றிய வெள்ளை நிர மல்லிகையோ பாடல் இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தரின் 126வது ஜனன தினத்தை முன்னிட்டு விபுலானந்தம்”சிறப்பு செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.அத்துடன் சுவாமி விபுலானந்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.