சீறிப்பாயும் உன்னிச்சைக்குளம் -அதிர்ந்து போன விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வீதிகளும் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் காடுகளில் பெய்துவரும் மழை நீரினால் உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும் நான்கு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக உன்னிச்சை நீர்பாசனக்குளத்தின் ஊடாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் வவுணதீவு-உன்னிச்சை பிரதான வீதியினை ஊடறுத்தும் நீர் பாயும் நிலையேற்பட்டுள்ளது.

அத்துடன் உன்னிச்சை குளம் திறக்கப்பட்டுள்ளதனால் தாழ் நிலங்களில் உள்ள சில வீடுகளும் காணிகளும் நீரில் முழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்யுமானால் இன்னும் அதிகளவான நீர் வெளியேற்றப்படும் தேவையுள்ளதாகவும் மட்டக்களப்பு நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.