அற்ப செற்ப சலுகைகளுக்கு துணைபோனால் எங்களது நிலங்கள் பறிபோகும்.


ஆயித்தியமலை கதிர் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆயித்தியமலை பாடசாலை மைதானத்தில்  நடைபெற்ற கலாச்சார விளையாட்டுப்போட்டி நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ச.வியழோந்திரன்,  அற்ப செற்ப சலுகைகளுக்கு துணைபோனால் எங்களது நிலங்கள் பறிபோகும், எம் மக்களின் விடிவுக்காக நாம் மட்டும் தான் போராட வேண்டும் என  தனதுரையில் குறிப்பிட்டார்.

கதிர் இளைஞர் கழகத்தின் தலைவர் யோ.சூரியகுமார் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு   போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர்,

ஆயுத போராட்டம் எமது நிலங்களை மீட்பதற்க்காக இடம்பெற்றது. ஆயுத போராட்டத்திற்கு பின்னராக தமிழர்களுடைய நிலங்களை மீட்பதற்க்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினர்களாகிய நாங்கள் தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.

பல எல்லைப்புற நிலங்களை மீட்டெடுப்பதிலும், மீட்டெடுத்தவற்றை தக்கவைப்பதிலும் நாங்கள் மிகுந்த சிரமப்படுகிறோம் தொடர்ந்து அர்ப்பணிப்போடு போராடுகிறோம்.

வேறு எந்த கட்சியினரும் நமது நிலங்களை மீட்டெடூப்பதற்கு முன்வரமாட்டார்கள் ஏனென்றால் அரசாங்கம் நிலங்களை அபகரிக்கின்றது அவர்கள் அரசாங்கத்தை சேர்ந்தவர்களுக்கும்  அரசாங்கத்தின் செயல்களுக்கும் துணைபோனவர்கள். துணைபோகிறார்கள்.

ஒரு விடயத்தை நீங்கள் விளங்கி கொள்ளவேண்டும் உதாரணமாக உங்களுக்கு ஓர் வீதி தேவை,  வீதி அமைக்கப்படுகிறது அந்த நிலம் உங்களுக்கு சொந்தமில்லை என்றால் அந்தவீதியை முழுமையாக நீங்கள் அனுபவிக்க முடியாது.

எங்களது இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் எங்களது நிலம் பிரதானமாக பாதுகாக்கப்படவேண்டும்.

இன்று நமது மாவட்டத்தில் ஒரு பிரச்சினை பூதகாரமாக வளர்ந்து வருகிறது வனஜீவராசிகள் திணைக்களம், மற்றும் வனஇலாகா போன்றவைகள்  நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல காணிநிலங்களை தங்களுக்கு சொந்தமானது என்று சொல்கிறார்கள்.

எனக்கு தெரியும் இந்த ஆயித்தியமலை பகுதியில் வசிக்கின்ற அதேபோன்று இந்த பிரதேசத்தில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்ற அனேகமான காணிகளுக்கு உறுதியில்லை, தற்காலிக அனுமதிபத்திரங்கள் கூட இல்லை. (பேமிட்) தற்போது இந்த காணிகளை அரச காணி என்கின்றனர்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது நம் மக்களின் நிலம் காணி தொடர்பாக கவனம் செலுத்துவது யார்? நாம்தான் தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான்.

நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் அற்பசொற்ப சலுகைகளுக்காக நாம் இன்று நிலத்தை இழந்தால், பாதுகாக்க தவறினால் நாம் தப்பித்து விடுவோம் நமது எதிர்கால சந்ததி இந்த நாட்டில் மாகாணத்தில் மாவட்டத்தில் மற்றைய சமூகங்களுக்கு முன்னால் கைகட்டி அடிமையாக நிற்கின்ற சமூகமாக மாறிவிடும்.

ஆகவே எங்களுக்கு அபிவிருத்தி என்பது தேவைதான், அபிவிருத்தி தேவையில்லை என்றில்லை நான் சவாலாக சொல்லுவேன் ஆளும் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்களைவிட நாங்கள் அதிகளவான அபிவிருத்திகளை செய்திருக்கிறோம் செய்து கொண்டுமிருக்கிறோம்.

எம் மக்களுடைய தேவை கூடுதலாக இருக்கிறது அதனால் நடைபெறுகின்ற எமது அபிவிருத்திகள் பெரிதாக தெரிவதில்லை.

எதிர்வரும் 19ம் திகதி ஆயித்தியமலை மணிபுரத்தில் இரண்டுகோடி பெறுமதியான பாடசாலை மாடிக்கட்டிடம் திறந்து வைக்கவுள்ளோம்.

அதே பத்தொன்பதாம் திகதி கறுவப்பங்கேணியில் இரண்டுகோடி பொறுமதியான பாடசாலை கட்டிடம், இன்னுமொரு இடத்தில் இரண்டுகோடி பெறுமதியான கனிஸ்ட வித்தியாலயம் திறந்து வைக்கவுள்ளோம்.

அதேபோன்று சிவானந்தா தேசிய பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடத்திற்கு அடிக்கல் வைக்கவுள்ளோம்.

இவ்வாறாக அபிவிருத்தி திட்டங்கள் பல நடைபெற்றுக்கொண்டு வருகிறது இவைகள் உங்களுக்கு தெரியவருவதில்லை காரணம் எங்களுடைய நிலப்பரப்பு அதிகம், தேவைகளும் அதிகம்.

ஆகவேதான் குறைவான,  குறைந்தபகுதிகளில் நடைபெறுகின்ற அபிவிருத்திகள் உங்களுக்கு அதிகமாகவும் பெரிதாகவும் தெரிகின்றது.

அவர்களின் அபிவிருத்தி திட்டங்களோடு எமது அபிவிருத்திகளை ஒப்பிட்டு பார்க்கின்றீர்கள்.

காத்தான்குடியின் நிலப்பரப்பு 7 சதுரகிலோமீற்றர், ஏறாவூரின் நிலபரப்பளவு 3.5 சதுரகிலோமீற்றர், ஓட்டமாவடியின்  நிலபரப்பளவு 14 சதுரகிலோமீற்றர், எல்லாமாக கூட்டிப்பார்த்தால் சுமாராக 30, 35 சதுர கிலோமீற்றர்.

நாங்கள் ஆயுதம்தூக்கி போராடிய காலத்திலிருந்து அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தும் தற்போதுவரை அவர்கள் ஆளும் கட்சியோடு இணைந்து, ஆளும் கட்சிக்குள்ளிருந்தும் இந்த 35 சதுரகிலோமீற்றர் பகுதிக்குள்தான் தமது அபிவிருத்திகளை மேற்கொண்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 2640 சதுரகிலோமீற்றர், அதில் நாங்கள் வாழும் நிலப்பரப்பு 2600 சதுர கிலோமீற்றர், 1085 கிராமங்கள் 75% வீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் அதனால்தான் செய்யப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பெரிதாக தெரியவருவதில்லை.

ஆனால் நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் பல்வேறுபட்ட அபிவிருத்திதிட்டங்களை செய்துகொண்டுதான் வருகிறோம்.

இந்த கிராமத்திற்கு மாத்திரம் எனது ஒரு வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எட்டுஇலட்சம் ரூபா நிதியை  ஒதுக்கீடுசெய்து செலவு செய்து வருகிறேன்.

நாங்கள் எமது மக்களின் உயர்ந்த இலக்கை அடைவதற்க்காக இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

அந்த முயற்சி வழுக்குமரம் போன்றது ஏறுவதும் சறுக்குவதும் இறங்குவதும் ஏறுவதுமாகத்தான் இருந்துவருகிறது.

ஒட்டு மொத்த தமிழ்மக்களுக்கான தீர்வு எழுத்து மூலமாக கிடைக்கின்றவரை எமது போராட்டம் தொடரும்,

அவ்வாறு எழுத்து மூலம்பெறப்படுகின்ற தீர்வுதான் நீடித்த நிலையான நன்மைபயக்ககூடியது, அவ்வாறான தீர்வுதான் எமது மக்களை தலைநிமிர்ந்து வாழச்செய்யும்.

யார் என்ன சொன்னாலும் தமிழ்மக்களின் இந்த இலக்கை அடைவதற்க்கான போராட்டத்தை முன்னெடுப்பதும், அந்த பொறுப்பும் சுமையும் எங்களது தலைமீதுதான் உள்ளது, சுமத்தப்பட்டுள்ளது. என தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் ஆயித்தியமலை பாடசாலை மைதானத்தில் நவீன பூங்கா அல்லது பார்வையாளர் அரங்கு மைதானத்தை செப்பனிட்டு அமைத்து தருவேன்.

அதற்கான திட்டமுன்மொழிவுகளை உரியவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறேன் அந்த திட்டங்கள் இந்த வருடத்திற்குள் நடைபெறாவிட்டால் என்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் செய்து முடிப்பேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.