மண்முனைப்பற்றின் தவிசாளர் உத்தயோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசசபையின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் உட்பட உறுப்பினர்கள் ஊர்வலமாக பிரதேசசபை வரை அழைத்துச்செல்லப்பட்டனர்.

பிரதேசசபையில் பிரதேசபையின் செயலாளர் கிருஸ்ணமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சி முக்கிஸ்தர்கள் ,மண்முனைப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தவிசாளராக கடமையேற்றதை தொடர்ந்து ஆரையம்பதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அண்மையில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு எஸ்.மகேந்திரலிங்கம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை இந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.