டெங்கினால் பறிபோன மற்றுமொரு உயிர்– வைத்தியசாலையின் கவனக்குறைவா என சந்தேகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரையம்பதியை சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரின் மகள் இன்று திங்கட்கிழமை காலை டெங்கு தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஆரையம்பதியை சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகரான சபாநாதன் என்பவரின் மகளான 17வயதுடைய செல்வி ச.ஜதுஸ்ரிக்கா என்னும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கற்றுவரும் குறித்த மாணவி அண்மையில் வெளியான கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 08 ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்று உயர்கல்வி பெறுவதற்கான தகுதியை பெற்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் நடைபெற்ற சிகிச்சைகள் தொடர்பில் ஏற்பட்ட குறைபாடுகளே இந்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்புகளிலும் இருந்து முன்வைக்கப்பட்டுவருகின்றது.

குறித்த மாணவி டெங்கின் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த மரணம் தொடர்பிலான அறிக்கை கிடைத்த பின்னரே அது தொடர்பில் கூறமுடியும் என தெரிவித்தார்.