நாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்…

    (சசி துறையூர்)    இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள விளம்பி வருட புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

இன, மத, மொழி அடிப்படையிலான பேதமின்மை என்பது சம்பிரதாயத்துக்கான பேச்சாகவே வெளி வருகின்றது. நாட்டில் உள்ள சகல மக்களும் நாட்டின் சொத்துக்களாக மதிக்கப்பட வேண்டும். 

நாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சமரசம், பொருளாதார வளம் என்பவற்றை நமது நாடு இன்னும் எய்தவில்லை. எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டது நாடு சுதந்திரம் அடைந்து, இன்னும் அரைத்த குரக்கனையே அரைத்துக் கொண்டிருக்கின்றோம். துவேசமே அனேகரின் அரசியல் மூலதனம் ஆகிவிட்டது. நாட்டின் மொத்தச் சொத்தையும் முழுமையாகப் பயன்படுத்தும் தலைமை இன்னும் உருவாகவில்லை.

பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் பகைமுகத் தவிர்ப்பு இன்றியமையாதது. அது இங்கு இன்னமும் எய்தப்படவில்லை. நாட்டில் உள்ள சகல மக்களும் நாட்டின் சொத்துக்களாக மதிக்கப்பட வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும். இனங்களை இனங்கள் விழுங்க முற்படுவதும், முறையற்ற நில அபகரிப்பும், நியாயமற்ற அதிகாரப் பிரயோகமும் என்பன எப்போதைக்குமான பேசு பொருட்களாக ஆகிவிட்டன.

இன, மத, மொழி அடிப்படையிலான பேதமின்மை என்பது சம்பிரதாயத்துக்கான பேச்சாகவே வெளிவருகின்றது. செயற்பாடு முற்றிலும் எதிர்மறையாகி விடுகின்றது. போரின் விளைவுகளில் இருந்து விடுபட முடியாதவர்களாக, பரிகாரம் பெற முடியாதவர்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தனை அவலங்களையும் சுமந்துகொண்டு பூமி மீண்டு ஒரு முறை சுற்றி வந்து, மறு சுற்றுக்கான தொடக்கப்புள்ளிக்கு வந்து விட்டது. விளம்பி என்ற பெயரிலான இந்தச்சுற்றிலாவது இலங்கையில் உள்ள அவலங்கள் நீங்குமா என்ற பழைய பல்லவியோடுதான் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொலிவுறுகின்றன. இச்செய்தியை வழமையான பல்லவியாகக் கொள்ளாதிருப்போம். விடயங்களை உள்வாங்குவோம். உள்ளத்தில் விதைத்துச் சிந்தனைப் பயிர் வளர்ப்போம். நாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.