பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் தூய்மையாகியது தம்பிலுவில் - திருக்கோவில் கடற்கரை பிரதேசம்

(ராம்)
“பூமி மாதாவை பாதுகாப்போம்” (Save the Planet) எனும் கருத்திட்டத்தின் கீழ் சத்திய சாயி சர்வதேச நிறுவன இலங்கை கிழக்கு பிராந்திய இணைப்புக் குழுவின் பொது நலனநோக்கு பிரிவின்(Public Outreach Committee) வழிநடத்தலில் தம்பிலுவில் சாயி நிலையத்தினால் திருக்கொவில் சாயி நிலையத்துடன் இணைந்து தம்பிலுவில் சிவன் கோவில் தொடக்கம் திருக்கோவில் முருகன் ஆலயம் வரையான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நீளமான கடற்கரை பிரதேசம் இன்று சுத்தம் செய்யப்பட்டது.
தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சாயி பக்தர்களுடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சாயி பக்தர்களும் இணைந்துகொண்ட இந்நிகழ்வில் திருக்கொவில் பிரதேச சபை தவிசாளர் திரு. இரா. கமல்ராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் உப தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் திரு. சுதாகரன், கிராம உத்தியோகத்தர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட றேஞ்ஜர்ஸ் விளையாட்டுக் கழகம், தம்பிலுவில் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் (2001 A/L Batch), திருக்கோவில் பல்கலைக் கழக மாணவர் சங்கம், ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் பெருமளவான பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பாக பங்காற்றியதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்களின் வருகையும் ஒத்துழைப்பும் தம்மை மேலும் ஊக்கப்படுத்தியதாகவும் ஏற்பாட்டாளர்களும் கலந்துகொண்டவர்களும் தெரிவித்தனர்.
சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் திருக்கோவில் பிரதேச சபையின் திண்ம கழிவு முகாமைத்து பிரிவினால் கழிவு சேகரிப்பு வாகனங்கள்மூலம் உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காலை சுமார் 8.15 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு சுமார் 10.00 மணியளவில் இனிதே முடிவுற்றது