வெல்லாவெளியில் நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வண்டிகள் பரிசோதனை

(பழுகாமம் நிருபர்)
தேசிய உணவு வாரத்தை முன்னிட்டு வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வண்டிகள் கடந்த
சனிக்கிழமை(21) அதிகாலையில் இருந்து வெல்வெளி பிரதேசத்திற்கு வெளியில் இருந்து முச்சக்கர வண்டி மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படும் வெதுப்பக உணவுப்பொருட்கள் மற்றும் வண்டிகள் என்பன சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்பரிசோதனையின் மூலம் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என இனங்காணப்பட்ட உணவுப்பண்டங்கள் அழிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட  முச்சக்கர வண்டிகள் உணவு வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு உணவுச்சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார பழக்க வழக்கங்கள்,  வெதுப்பக உணவுப்பொருட்களை குறைத்து போசாக்கான பொருத்தமான மாற்று உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பாகவும் உணவு வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களின் தனிநபர் சுகாதாரம், பொருத்தமான உடை, பாதுகாப்பு அங்கிகள் தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டப்பட்டது. 

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி,  சுகாதார வைத்திய அதிகாரி Dr.வே.குணராஜசேகரம், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் சி.லோகேஸ்வரன், பொதுச்சுகாதார பரிசோதகர்களான கு.குபேரன், சி.சிவபாதம், சி.ஜீவிதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.