ஈச்சந்தீவில் சிறப்பாக நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா

 (சசிதுறையூர்)       மட்டக்களப்பு ஈச்சந்தீவு கிராமத்தில் ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகமும்   , உதயசூரியன் இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கிராமிய விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பான முறையில் சித்திரை முதல்நாளான இன்று (14/04/2018 சனிக்கிழமை) நடைபெற்றது.

பிரதேசத்தில் புகழ்பெற்ற விளையாட்டுக்கழகமும்,  இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரை புதுவருட விளையாட்டுப்போட்டி இம்முறை கிராமத்துக்குகிடைத்த புதிய விளையாட்டு மைதானத்தில் நடந்தேறியமையும் சிறப்புக்குரியது.

விளம்பி வருட பிறப்பை முன்னிட்டு  பாரம்பரிய விளையாட்டுக்களை இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து நடாத்தி இருந்தார்கள். இதன் மூலம் கிராமத்து இளைஞர்கள் பழையவற்றை பாரம்பரியத்தை இன்னும் மறக்காது கைவிடாது பேணிச்செல்ல எடுத்த முயற்சியை ஆர்வத்தை இந்த
விளையாட்டு போட்டியின் மூலம் நிருபித்துள்ளார்கள்.

ஈச்சந்தீவு கிராமம் பலகாலமாய் அழிவின் விளிம்பில் உள்ள கிராமிய கலைகளையும் பாரம்பரியத்தையும், மரபு சார் வழிபாட்டு முறைகளையும் பாதுகாத்தும் போற்றியும் வருகின்ற ஒர் கிராமம், இங்கே குறிப்பிடத்தக்க விடயம் இன்றளவில் இந்த கிராமத்து இளைஞர்கள்  தமது பாரம்பரியம் பண்பாடு கலை கலாச்சாரம் போன்ற விடயங்களில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு
இந்த விளையாட்டு நிகழ்வு நல்ல சான்று.

ஆண் பெண் இருபாலாருக்குமான மரதன், தோணியோட்டம், வழுக்குமரம் ஏறுதல் போன்ற பல வேடிக்கை விநோத போட்டிகளுடன் இம்முறை சித்திரை ஈச்சந்தீவு கிராம மக்களுக்கு மலர்ந்திருக்கிறது.

இன்றைய சித்திரை குதுகல நிகழ்வுக்கு
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ செ. சண்முகராஜா ,
மண்முனை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் திரு. சிறிதரன் , மண்முனை மேற்கு
பிரதேச கலாசார உத்தியோகஸ்தர்
திரு.மு.சிவானந்தராசா
ஆகியோர் அதிதிகளாக கலந்து போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களையும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.