ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு

அன்னை பூபதியின் நினைவு நாளில் தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் காந்திபூங்காவில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

தமது தாயை இழந்து பரிதவித்து நிற்கும் பிள்ளைகளுக்கு துணையாக இருக்கவேண்டிய தந்தை சிறையில் வாடிக்கொண்டுள்ளார்.இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளும் கதியற்ற நிலையில் உள்ளனர்.

ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி கடந்த காலத்தில் வடகிழக்கில் கையெழுத்துபோராட்டம் நடாத்தப்பட்டு ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்பட்டிருந்தது.

ஆனந்த சுதாகரன் புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார் என ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளும் தமிழ் மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கு ஜனாதிபதி எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரிய விடயமாகும்.ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் கோரிக்கையினை உதாசீனம் செய்யும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றன.

இந்த நிலையில் ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மீண்டும் போராட்டங்களை நடாத்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் தனது உயிர் பிரியும் வரையில் போராட்டம் நடாத்தி தமிழ் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் அன்னை பூபதியின் நினைவு தினத்தில் ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்த போராட்;டம் இந்த அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கண்களை திறக்கவைக்கும் என்று கருதுகின்றோம்.எனவே அரசியல் கட்சிகள் பேதங்களை மறந்து இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவினையும் கோரி நிற்கின்றேன்.