நற்பிட்டிமுனையில் 1832 இல் கட்டப்பட்ட வீடும் வன்னியனார் பற்றிய தகவலும்

(செ.துஸ்யந்தன்)
மட்டக்களப்பு பகுதியை சிற்றரசர்கள் ஆட்சி செய்துவந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த நற்பிட்டிமுனைக் கிராமத்தை மையமாக வைத்தே வன்னிமைக்கான திக்கதிபர்கள் ஆட்சி செய்துவந்துள்ளனர்.

இக் கிராமத்தை மையமாக வைத்தே மக்கள் குடியேற்றங்கள் ஏனைய கிராமங்களுக்கு பரவியுள்ளது.அக் காலத்தில் நாப்புட்டிமுனை என அழைக்கப்பட்ட தற்போது நற்பிட்டிமுனையாகவுள்ள கிராமத்தில் பூங்கொடிவெட்டை (தற்போது புங்கடிவெட்டை) என அழைக்கப்படும் இடத்தில் வன்னிமைக்குரிய பரம்பரையினம் வாழ்ந்துள்ளனர். தற்பேதும் அவர்களின் வழித்தோன்றல்கள் இங்குள்ளனர். 

இங்கு சிற்றரசர்களுக்குரிய நீதிமன்றம் மற்றும் குற்றம் செய்யும் சிறைக்கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கான சிறைச்சாலை என்பன இருந்துள்ளது. அக் கட்டிடங்கள் அமைந்திருந்ததற்கான தடயங்கள் உள்ளன. 

சொறிக் கற்களால் கட்டப்பட்ட வீடுகள், மதில்கள், அத்திவாரக்கட்டுக்கள், சித்திர வேலைப்பாடுடன் கூடிய அழகிய ஜன்னல்கள், நிலைகள், கதவுகள், மோட்டு வளைவில் பாரிய மரக்குற்றிகள், உறுதியான மரங்கள் நாட்டோடு போடப்பட்ட வீடு என்பன இன்னும் எச்சங்களாகவுள்ளன.

இன்று 2018-04-18 இல் நற்பிட்டிமுனைக்கு சென்றபோது அங்கு 1832 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றின் பாதி இங்கு எஞ்சியுள்ளதைக் கண்டேன். ஏனைய கட்டிடங்கள் சிதைவடைந்த நிலையிலே மண்ணில் புதையுண்டு போயுள்ளதைக் கண்டேன்.