மட்டக்களப்பில் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவேந்தல் -மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்ஒன்றியத்தினால் அனுஸ்டிப்பு

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியளாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (28) கவனயீர்ப்புப் போராட்டமும் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் 13 வருடங்களின் முதன்முறையாக ஊடகவியளாளர் சிவராம் அவர்களின் சகோதரி திருமதி டி.சூரியகுமாரி அவர்கள் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பிரமுகர்கள், பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஊடகவியளாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது மலரஞ்சலி செலுத்தப்பட்டு தீபம் ஏற்றி கலந்துகொண்ட அனைவராலும் அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் கவனயீர்ப்புப் போராட்டமும், கையெழுத்துப் பெறும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது.

ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனியிடத்தினைக்கொண்டு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை தென் பகுதியில் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் கொண்டுசென்ற ஊடக ஜாம்பவனாக திகழ்ந்த நிலையில் பேரினவாதிகளினால் நயவஞ்சகமாக சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் படுகொலைசெய்யப்பட்டார்.

மாமனிதர் டி.சிவராம் படுகொலையின் சூத்திரதாரிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்துவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அவரது நினைவு தினத்தன்றும் அந்தகோரிக்கைக்கு  வலுச்சேர்க்கும் வகையிலேயே இக்கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.