மாடு மேய்க்க சென்றவருக்கு காலணான சட்ட விரோத மின்பாவனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் 35ஆம் கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பில் ஒருவர் உகனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தங்கராசா மகேஸ்வரன் என்பவர், இன்று (21) அதிகாலை வயலில் கட்டப்பட்டிருந்த மின்சாரம் இணைக்கப்பட்ட கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாரென உகன பொலிஸார் தெரிவித்தனர்.

தமது கால்நடைகளை மேய்த்து வருவதற்காக இரண்டுபேர் 35ஆம் கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோணகல 32ஆம் கிராமப் பகுதிக்கு, சென்றபோது அங்குள்ள வயல் பகுதியில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பியில் சிக்குண்டுள்ளார்.

இதன்போது மற்றையவர் தப்பிய நிலையில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கூடவந்தவர் தெரிவித்தார்.

குறித்த பகுதி மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டபோதிலும் அதில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பன்றிகளில் ஊடுருவலை தடுப்பதற்காக கீழ் பகுதியில் இந்த மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் இழுக்கப்பட்டுள்ளன.

இது குறித்த குறித்த வயல் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அம்பாறை நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.