பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மரியால் பேராலயத்தில் 2005ஆம்ஆண்டு நத்தார் ஆராதனையின்போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் 2015ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப்மாஸ்டர் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அது தொடர்பான விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றன.

இதன் கீழ் நான்காம் கட்ட விசாரணைகள் மூன்றாம் கட்ட விசாரணைகள் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடின் முன்னிலையில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மேலதிக விசாரணைகளுக்கான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.