News Update :
Home » » "நிக் அன்ட் நெல்லி பௌண்டேஷன்" நிதி உதவியில் போஷாக்கு உணவுத் திட்டம்.

"நிக் அன்ட் நெல்லி பௌண்டேஷன்" நிதி உதவியில் போஷாக்கு உணவுத் திட்டம்.

Penulis : Unknown on Wednesday, March 21, 2018 | 6:09 PMசிறுவர்களிடையே போஷாக்கின்மை எமது மாவட்டத்தின் பாரிய சவாலாக இருந்து வருகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மை. இது இடை குறைந்த பிள்ளைகளை எமது கிராமப்புறங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளதுடன் அவர்களது போஷாக்கு மட்டம், கல்வி என்பனவற்றில் முன்னேற முடியாத நிலையினையும் உருவாக்கியுள்ளது. எல்லா வகையிலும் பின்தங்கிய எமது மக்களிடையே இவ்வாறான குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு உதவுகின்ற திட்டங்கள் மந்த கதியிலேயே எடுத்து வரப்படுவது அனைவரும் அறிந்ததே.

 இதனால் போசாக்கு குறைந்த குழந்தைகள் அதிகரித்து பாடசாலைக்கு வருகின்ற விருப்பம் குறைந்து கொண்டு போகின்ற நிலமையில் பட்டிருப்பு தொகுதியில் உள்ள போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட படுவான் கரையின் அநேக முன்பள்ளி பாடசாலைகள் பரிதாப நிலையில் நடாத்தப்பட்டுக்கொண்டிருப்பதனை கருத்தில் கொண்டு பல வேண்டுகோளினை கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

 இவ்வாறான நிலையில் இருந்து எமது எதிர்காலத்தினை மீட்டெடுக்கும் முயற்சிகளில் கிழக்கிலங்கை இந்து சமய மற்றும் சமுக அபிவிருத்தி சபையினரின் அயராத முயற்சியில் நிக் அன்ட் நெல்லி பௌண்டேஷன் அமைப்பினரின் நிதி உதவியில் நெல்லிக்காடு கூளாவடி பாலர்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டம் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 இந்நிகழ்வுக்கு சபைவின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில்   17.03.2018ம் திகதி அன்று இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கான தலைவர் வசந்தராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், மா.நடராசா, பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், முன்பள்ளி தொடர்பான போரதீவுப்பற்று பி.தே.செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கமல்ராஜ், ஊடகவியலாளர், வ.சக்திவேல், கி.இ.இ.ச.ச.அ.சபையின் செயலாளர் கலாவதி ஆகியோருடன், ஆலயங்கள், மன்றங்கள், சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இதில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


 இந்த நிகழ்வில் அதிதிகளை வரவேற்றல், மாணவர்களின் வரவேற்பு நடனம், மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், அதிதிகள் உரை என்பனவற்றினைத் தொடர்ந்து உணவு வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் மாணவர்களைப் பாராட்டி பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 'இத்திட்டத்தின் மூலம் நாளாந்தம் இக் குழந்தைகளுக்கு உள்ளூர் தானிய வகைளுடன் போஷாக்கான உணவுகள் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர்களது கற்கும் திறனை அதிகரிப்பதுடன் ஆரோக்கியமான ஒரு எதிர்கால சந்ததியினை உருவாக்கி எமது மக்களை பலப்படுத்துவதே அதன் நோக்காகும்' என இச்சபையின் தலைவர் தனது உரையில்  சுட்டிக்காட்டினார்.

 இச்செயற்திட்டம் பெற்றோரிடம் மாத்திரமின்றி பிரதேச மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இத்திட்டம் இடைவிடாமல் நடைபெறுவதற்கு பெற்றோர், பிரதேச மக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறி, ஒழுங்கான முறையில் இதனைக் மேற்கொண்டு நடாத்துகின்றமைக்காக நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்து, இவ்வாறான திட்டம் பின்தங்கிய கிராமத்திற்கு வரப்பிரசாதம் என விதந்துரைத்தமை இந்த ஏற்பாட்டுக் குழுவினருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 எமது சமுக உறுப்பினர்களுக்கு இருக்கும் அக்கறையை விட பெற்றோர்களுக்கே பிள்ளைகள் மீது அதிக அக்கறை பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும் எனவும், இந்த சபையினரின் இடைவிடாத அக்கறை  மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது எனவும் செஞ்சிலுவைச்சங்கத் தலைவர்  வசந்தராசா அவர்கள் குறிப்பிட்டார்.

சி.தணிகசீலன் குறிப்பிடுகையில் சமுகத்தின் பல்வேறுபட்ட அமைப்புகளிடையே ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும் அதன் மூலம் எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும். அந்த ஒற்றுமை சீர்குலைந்தால் எதனையும் நாம் சாதித்துக்கொள்ள முடியாது என தனது உரையில் குறிப்பிட்டதுடன்

 இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கி இருக்கும் எமது புலம்பெயர் அமைப்புக்களின் கரிசனையினையும் வெகுவாகப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
Add caption
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger