இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன-ஜனா

இணைந்த வடகிழக்கில் சமஸ்டி தீர்வினைப்பெற்று தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதையே இன்று நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் உணர்த்தி நிற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

இணைந்த வடகிழக்கிலேயே இவ்வாறான வன்முறைச்சம்பவங்களை தவிர்த்துக்கொள்ளமுடியும் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பகுதியில் உள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமினால் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

நேற்று திங்கட்கிழமை மாலை கோரகல்லிமடு பல்தேவைக்கட்டிடத்தில் இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமினால் கடந்த ஆண்டு ஒதுக்கீடுசெய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதியில் இரண்டு மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு இந்த கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

கிராம மட்டத்திலான செயற்பாடுகளில் பெருமளவான பங்களிப்பினை வழங்கிவரும் மாதர் அபிவிருத்தி சங்கங்களை பலப்படுத்தும் வகையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரால் இந்த கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பெருமளவான மாதர் அபிவிருத்தி சங்கங்க உறுப்பினர்;களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

நல்லாட்சியின் மீது சிறுபான்மையினம் நம்பிக்கையிழக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இந்த ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ஒரு கட்சி அமைப்பாளர் போல் செயற்பட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களினால் பொதுமக்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் பல இலட்சக்கணக்கான நிதியினை கிழக்கு மாகாண ஆளுனர் மீளப்பெற்று அதிகாரிகளின் தங்குமிடங்கள் மற்றும் அரச கட்டிடங்களை புனரமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியில் இருந்து 23 மில்லியன் ரூபாவினை இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுனர் மீளப்பெற்றுள்ளார்.இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரை சந்தித்து கலந்துரையாட இருக்கின்றோம்.

கிழக்கு மாகாண ஆளுனர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு அரசியல் கட்சியின் மாகாண அமைப்பாளர் போல் செயற்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.இந்த நிதிமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் தான் சார்ந்திருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வளர்ப்பதற்காக ஒரு அமைப்பாளரைப்போன்று செயற்பட்டுவருவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

கிழக்கு மாகாண ஆளுனரால் நடாத்தப்படும் நிகழ்வுகள் அவ்வாறான ஒரு சந்தேகத்தினையே அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.நியமனம் வழங்கும் நிகழ்வுகளிலும் அரச நிகழ்வுகளிலும் தான் கட்சிசார்ந்த நிகழ்வாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுத்துள்ளது.புதிய முறையிலான தேர்தலை சந்தித்த இந்த நாட்டில் பெரும்பாலான உள்ளுராட்சிசபைகளில் ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.வடகிழக்கில் இரண்டு சபைகளை தவிர எந்த சபையிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது சபைகளிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 127000 வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்துபெற்றுக்கொண்டது.ஆனால் இந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் வெறும் 80000வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.இதற்கான காரணங்களை நாங்கள் ஆராயவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 42000வாக்குகளைப்பெற்றுள்ளது.தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு 18000 வாக்குகளைப்பெற்றுள்ளது.தையல் மெசின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூட மட்டக்களப்பு மாவட்டத்தில்; ஐந்து ஆசனங்களைப்பெற்றுள்ளனர்.இந்தநிலை தொடர்ச்சியாக இருக்குமானால் மிகவிரைவில் வரவுள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான தமிழர்கள் உள்ளபோதிலும் 2012ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் 11ஆசனங்களைமட்டுமே பெற்றுக்கொண்டோம்.2015ஆம் ஆண்டு ஜனாதிபதியை தெரிவுசெய்ததன் பின்னர் கிழக்கு மாகாணசபையில் ஆளும்கட்சியுடன் பங்காளியாக இருப்பதன் மூலம் முதலமைச்சரைப்பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தபோதிலும் எம்மைவிட குறைந்த சனத்தொகையினைக்கொண்ட முஸ்லிம் உறுப்பினர்கள் எங்களைவிட அதிகளவில் இருந்ததன் காரணமாக தமிழ் முதலமைச்சரை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையேற்பட்டது.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல கட்சிகளாக பிரிந்து தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்துக்கொள்வோமானால் 2011ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட 11 ஆசனங்களைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையே ஏற்படும்.

இவற்றினை உணர்ந்து கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பாடங்களை தெளிவாக கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எமது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டுமானால் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தி எமது மக்களையும் மண்ணையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்தவர்கள்.பொருளாதாரம்,கல்வி.உடமைகள்,உயிர்கள் என பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டவர்கள்.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்திருக்கி;ன்றோம்.

எல்லைப்பகுதி மட்டுமன்றி எமது பகுதிகளில் இருந்த அரச காணிகள் கூட போலியான உறுதிகள் செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பாடசாலை மைதானங்கள்,மயானங்கள் கூட கபளீகரம் செய்யப்பட்டன.
சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை அட்டப்பள்ளத்தில் காலம்காலமாக மயானமாக தமிழ் மக்கள் பாவித்துவந்த காணி சகோதர இன பேராசிரியர் ஒருவரினால் அபகரிக்கும் நிலையேற்பட்டது.அதற்கு எதிராக போராடிய பிரதேச ஆலய தலைவர் உட்பட 23பேர் சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்களின் கல்லரைகளையும் சேர்த்து வேலியடைத்து அந்த காணியை அபரிக்க முயற்சித்துள்ளனர்.அந்த காணி அப்பகுதி தமிழ் மக்களினால் 200 வருடத்திற்கு மேலாக மயானமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.

ஆனால் அந்த சகோதர இன பேராசிரியர் அந்த காணியை 25வருடத்திற்கு முன்னர் கொள்வனவுசெய்ததாக கூறியுள்ளார்.அவர் காணி வாங்குவதற்கு முன்னர் இறந்தவர்களின் கல்லறைகள் அங்கு உள்ளன.அதனை பார்க்காமலா அந்த காணியை அவர் கொள்வனவுசெய்திருப்பார்?.

1987,88 காலப்பகுதியில் அப்பகுதியில் நான் நடமாடியிருக்கின்றேன்.அந்த பிரதேசத்தினைப்பற்றி நன்கு அறிந்தவன் நான்.அந்த காணியை உரிமை கோருபவர் அதற்கான பத்திரத்தினை போலியாகவோ அல்லது பணபலத்தின் ஊடாகவோ செய்யப்பட்டுள்ளதாகவே நோக்கப்படவேண்டும்.இவ்வாறான நிலையில் எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனத்தினால் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக பறிபோகும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
1980ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழமுடியாது எமக்கான ஒரு நாடு வேண்டும் என்பதற்காக புத்தக பைகளை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கி தூக்கியவர்கள் நாங்கள்.2009ஆம் ஆண்டு அது கனவாகி போனது.

இன்று நாங்கள் தமிழீழத்திற்காக போராடிய நாங்கள் இணைந்த வடகிழக்கில் கூடிய அதிகார பரவலாக்களுடன் கூடிய சமஸ்டியை வேண்டி நிற்கின்றோம்.இந்தவேளையில் நாங்கள் பிரிந்துநின்றோமானால் உள்ளுராட்சிசபையில் ஒரு தமிழ் கட்சி தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலை மாகாணசபையிலும் ஏற்பட்டால் தமிழ் மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை நேசிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட்டு தமது பலத்தினை நிரூபிக்கும் நிலையினை ஏற்படுத்தவேண்டும்.

இந்த நல்லாட்சியை ஏற்படுத்திய மக்களுக்கு அந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத சூழ்நிலையே இருந்துவருகின்றது.2015ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை.தற்போதுதான் காணாமல்போனவர்களை கண்டறியும் குழுவுக்கான ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்னும் இரண்டு வருடங்கள்தான் உள்ள நிலையில் இந்த இரண்டு வருடத்தில் இவர்கள் எதனைச்செய்யப்போகின்றார்கள் என்ற ஏக்கம் அனைவரிடமும் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமைநிலையில்லை.ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கோணத்தில் செயற்படுகின்றது.இவ்வாறு நாங்கள் பிரிந்துநிற்போமானால் எமக்காக உயிர்நீர்த்தவர்களின் கனவுகளை நாங்கள் நிஜங்களாக்கமுடியாது.
இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ் மக்களின் அனைத்தையும் பாதுகாக்கமுன்வரவேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் இன்று கிழக்கில் முஸ்லிம் மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதையே இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.இதனை சகோதர முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வடகிழக்கு இணைந்திருக்கும்போதே இவ்வாறான சம்பங்களை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து எதிர்காலத்தில் உருவாகவுள்ள அரசியல் யாப்பினை உருவாக்க உறுதுணையாக இருக்கவேண்டும்.இணைந்த வடகிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையினை நாங்கள் பேசி தீர்மானிக்கவேண்டும் என்பதையே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ்பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற செய்தியை அம்பாறை தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்தி நின்ற சில நாட்களிலேயே அட்டப்பள்ளத்தில் தமிழர்களின் மயானக்காணி அபகரிக்கப்படுகின்றது என்றால் இது தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலையை உங்களுக்கு ஏற்படுத்திவருகின்றது.