தமிழர்களின் போராட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மலினப்படுத்தவில்லை –செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

காணாமல்போனோர் தொடர்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்தில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் சேர்க்கப்படவில்லையென சிலர் தெரிவித்துவருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கவேண்டும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் தமது பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்த கூற்றினை மீள் பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டெலோ உறுப்பினர்களுக்கான கூட்டம் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பெய்லி வீதியில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாரமின் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் வாரங்களில் உள்ளுராட்சிசபைகள் அமைக்கப்படவுள்ள நிலையில் அதனை அமைக்கும்போது உறுப்பினர்கள் செயற்படவேண்டிய முறைகள் அவர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்பானது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாரம் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட டெலோவின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓருபோதும் செய்யவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது பொய்யான கருத்துகளை சிலர் தெரிவித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.,
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. அது மக்களிடம் செல்லவில்லை என்ற குறை இருக்கின்றது. மக்களுடைய பிரச்சனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதத்தினை மக்களிடம் சொல்லவில்லை, தமிழ்க் கட்சிகளுக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கியிருந்தமை போன்றவை இதற்கான காரணங்களாகும்.

எங்களுடைய வாக்குகள் பிரிக்கப்பட்டமையால் பெரும்பான்மைக் கட்சிகள் பெரும்பாலான ஆசனங்களை பெற்றுக்கொண்டன. மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வே எங்களுடைய பின்னடைவுக்கு காரணமாகும். இதனை நாங்கள் திருத்திக்கொள்ளாதவரை மேலும் பின்னடைவை நாங்கள் சந்திப்போம்.

காணாமல் போனோர் காரியாலயம் சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்கவேண்டுமென்ற ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்திலே இந்தக் காரியாலயத்தை அமைத்திருந்தது.

நாடாளுமன்றத்திலே காணாமல் போனோர் தொடர்பான விவகாரம் வருகின்றபோது அதனை ஆதரித்து நாங்கள் வாக்களித்தோம். காரணம் யாதெனில் கடந்தகால விடயங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. அதனை ஏற்க நாங்கள் தயாரில்லை. காணாமல் போனோர் தொடர்பான விவகாரத்தை நாங்கள் எதிர்த்தோம் அல்லது கைவிட்டோம் அவர்கள் விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கரிசனை கொள்ளவில்லை என்ற பெரியதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடைபெறக்கூடாது என்ற சட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் இங்கு வருதை தந்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள்; பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நாடாளுமன்றத்திலே மூன்று முறை ஒத்திவைப்பப் பிரேரணையை நாங்கள் கொண்டுவந்திருந்தோம்.

ஐ.நா சபையின் தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு நாங்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருந்தோம். எங்களுடைய மக்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும் இராணுவத்திடமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம். அத்துடன் சிறையிலிருக்கின்ற உறவுகளை விடுதலை செய்யவதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்விடயத்தில் இயன்றளவு தனது ஆளுமையை கையாண்டிருக்கின்றது. எங்களுடைய அழுத்தத்தின் காரணமாகவே பாராளுமன்றதத்தில் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் காரியாலயம் அமைப்பதற்கான சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. எங்களுடைய அழுத்தம் காரணமாகவே நிதி அமைச்சு அதிகளவான நிதியை ஒதுக்கியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்கின்ற எந்தவொரு வேலையையும் செய்யாது. இலங்கை அரசாங்கத்திடம் விலைபோகின்ற எந்தவொரு வேலையையும் செய்யாது. எமது மக்களுடைய நியாயமான போராட்டங்களை நாங்கள் ஜனாதிபதியிடம் பேசி மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

கேப்பாப்பிலவு, முள்ளிக்குளம் மக்கள் இன்றுவரை தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கின்றது. மக்களுடைய போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது.

இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே பிரச்சனைகள் தோன்றியுள்ளன. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அது கொண்டுவரப்படும்பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சரியானதொரு முடிவை எடுக்கும்.