ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் பட்டதாரிகள் -நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்து

வேலையற்ற பட்டதாரிகளின் வரலாற்றில் மகஜர் ஒன்று ஜனாதிபதி ஒருவரிடம் கையளிக்கப்பட்டு அதற்கான பதில் உடனடியாக வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை (03-03)காலை மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேலையற்ற பட்டதாரிகளினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரைப்பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டத்தின்போது குறித்த மகஜர் குறித்த பேசியதுடன் அந்த மகஜரில் குறிப்பிட்ட விடயங்களுக்கு தீர்வினை அறிவித்தார்.

இது தொடர்பில் காந்திபூங்காவில் கூடிய பட்டதாரிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஒட்டுமொத்த பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி நல்ல முடிவினை அறிவித்துள்ளதாகவும் இது பட்டதாரிகளின் போராட்டத்திற்கு கிடைத்தவெற்றியெனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக தொழில்உரிமைக்காக மேற்கொண்ட போராட்டத்திற்கான ஒருவெற்றியென தெரிவித்த அவர் இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று தமது கோரிக்கைக்கு மதிப்பளித்து உடனடியாக தீர்வு அறிவித்தமைக்கு பட்டதாரிகளின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அதனை துரிதப்படுத்த நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் திருமதி தேவதாசன் தெரிவித்தார்.