வேலையற்ற பட்டதாரிகளின் கிழக்கு மாகாணசபை முற்றுகை வழக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணசபையினை முற்றுகையிட்டு 2017ஆம் ஆண்டு 04மாதம் நடாத்தப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் நான்கு பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 2018.07.23ஆம் திகதிக்கு ஒத்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தங்களது தொழில் உரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் 2017.04.25 ம் திகதி கிழக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு 2017.05.23 அன்று மட்டக்களப்பு பட்டதாரி சங்க தலைவர் தெ. கிஷாந்த், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர், திருமலை பட்டதாரிகள் சங்க தலைவர் சிவகுமார், செயலாளர் பிரகலாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு, இன்று எட்டாவது தடவையாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கானது மீண்டும் 2018.07.23 ம் திகதி வழக்கு பிற்போடப்பட்டுள்ளது..
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெ.கிஷாந்த் ,

 மட்டக்களப்பு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு ஒரு வருடங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.. நீதிமன்ற வழக்குகளைப் போலவே வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் கனவுகளும் பிற்போடப்பட்டுக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் 1300 ற்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை வரவேற்கத் தக்கது, இருப்பினும் அதிகரித்து வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படாமையும், ஆசிரியர் மற்றும் ஏனைய திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படாமையும் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மனதில் விரக்தியை உண்டு பண்ணி மேலும் போராட்டங்களை வலுவடையச் செய்யும்..

எனவே இதனை ஒரு சமூக பிரச்சினையாக கருதி இதற்குரிய தீர்வினை மிக விரைவில் பெற்றுத் தர வேண்டும் என நான் இந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.