ஜனாதிபதியின் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்,தமிழ் அரசியல்வாதிகள் புறக்கணிப்பு –கடும் அதிருப்தி தெரிவிக்கும் தமிழர்கள்

மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியனம் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளப்படாமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக மாவட்ட அரசாங்க அதிபர் உள்ள நிலையில் நேற்றைய ஜனாதிபதியின் நியமனம் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மக்களினால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கவனத்தில் கொள்ளப்படாத நிலை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் ஜனாதிபதிக்கு அருகில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகோதர இனத்தினை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட தமிழ் பிரதிநிதிகள் மிகவும் பின்புறமான ஆசனங்களில் அமர்த்தப்பட்டதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு பின்புறமான ஆசனங்களில் அமைப்பாளர்களும் உதவியாளர்களும் அமர்ந்திருந்த நிலையில் அவர்களுக்கு பின்புறமான ஆசனத்திலேயே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் போன்றோர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு நகரில் இவ்வாறான முக்கிய நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மாவட்டத்தின் முக்கிய அதிகாரியும் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் பெரும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவகையாக இருக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.