மட்டக்களப்பில் உலக நாடக தினம் அனுஸ்டிப்பு

உலக நாடக தினம் இன்று சர்வதேசம் எங்கும் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அதற்கு இணைவாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மனிதன் மனித உணர்வுடன் இன்புற்று வாழும் வகையில் தலைமைத்துவ பண்புகளையும் மனித விழுமியங்களையும் நாடகங்கள் வளர்க்கின்றன.
இவ்வாறான உன்னத நாடகத்தினை சிறப்பிக்கும் வகையில் அனுஸ்டிக்கப்படும் உலக நாடக தினத்தினை முன்னிட்டு மட்டக்கள்பில் உலக நாடக தினம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும் மட்டக்களப்பு எங்கள் ஆசான் அரங்கியல் கலை பீடமும் இணைந்து இந்த நிகழ்வினை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையில் நடாத்தியது.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூட ஸ்தாபகர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வலய கல்வி அதிகாரிகள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலை ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இயந்திர வாழ்க்கைக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கலை முக்கிய பங்காற்றுகின்றது.இயந்திரவாழ்க்கைக்குள் சிக்குண்டுள்ள எதிர்கால சந்ததியினரை அதற்குள் இருந்து மீட்டு சந்தோசமான வாழ்வினை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் மேற்கொண்டுவருகின்றது.

மாணவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் தேவையற்ற விடயங்களுக்குள்ளும் உள்வாங்கப்படும் நிலையில் இவ்வாறான ஆற்றுப்படுத்தகைகளை கடந்த காலத்தில் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்திவருவதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தி நின்றது.

இந்த நிகழ்வில் நாடக ஆற்றுகைகளும் பாடல்களும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.