கிழக்கு தமிழர் தரப்பு இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தல்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் தரப்புகளும் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையேற்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துசெயற்பட முன்வருமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள்  ஒன்றிணைந்ததாக இந்த கூட்டம் நடைபெற்றது.

கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்னெடுத்துவருகின்ற 'எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதி உச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஓரே அணியில் போட்டியிட வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.' என்ற உத்தேச வேலைத் திட்டவரைபுக்கு இறுதிவடிவம் கொடுப்பதற்காவும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கென முழுக் கிழக்கு மாகாணமும் தழுவியதான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காகவும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதேச செயலாளர் மட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழ் கிராமங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கட்டமைப்புகள் தொடர்பிலும் ஆராய்பபட்டது.