Breaking News

மஹாசிவராத்திரி


         
(ஆ.நிதாகரன்) மஹாசிவராத்திரி இந்துக்களால்  கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். மஹாசிவராத்திரிவிரதம் எதிர்வரும் 13.02.2018(செவ்வாய்க் கிழமை) அனுஸ்ரிக்கப்படும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில்  வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். 
மஹாசிவராத்திரி அன்று இயற்கையிலேயே சக்திநிலை மேல் நோக்கி தூண்டப்படுகிறது. முறையான மந்திர உச்சாடனம் மற்றும் தியானத்தின் துணையுடன் தெய்வீகத்தை இன்னும் ஒரு படி நெருங்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே உள்ளது. 
வாழ்க்கையில் முறையான ஆன்மீக சாதனைகள் என்று எதிலும் ஈடுபடாத ஒருவருக்குள்ளும் மஹாசிவராத்திரி அன்று சக்தி நிலையில் தூண்டுதல் ஏற்படுகிறது.
யோக சாதனையில் ஈடுபாடுள்ள ஒருவருக்குஇ தம் முதுகுதண்டுவடத்தை நேராக வைத்து கொள்வது முக்கியமானது. இதையே வேறுவிதமாக இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும் என்கிறோம்.
மஹாசிவராத்திரி, ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, உலகியல், குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும் மிக முக்கியமானது.லட்சிய வாழ்வில் இருப்பவர்களால் சிவன் தன் எதிரிகளை வெற்றி கொண்ட நாளாக பார்க்கப்படுகிறது.
மஹா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும் நதிகளில் கங்கையும்இ பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
சிவனுக்குரிய விரதங்களாக
நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
புராணங்களில் மகாசிவராத்திரியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும் வேடனுக்கு சிவன் காட்சியளித்த கதை கொஞ்சம் விஷேசமானது.மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும் ஒரு விலங்கு கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி நொந்தவாறு திரும்பிக்கொண்டிருந்த அவன் வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான்.
ஏதாவது விலங்கு அந்த நீர்நிலைக்கு வரும். அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான்.
அது வில்வ மரம் என்பதும் அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது. வேடன் உறங்காமல் வரப்போகும் விலங்கிற்காகக் காத்திருந்தான்.
அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. 
அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.
வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான் "வேடனே" என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். தயவுசெய்து என்னைக் கொல்லாதே'' என்று வேண்டியது.
அதற்கு வேடனோ "மானே" என் குடும்பத்தினரின் பசியைப் போக்கவேண்டியது எனது கடமை. உன்னைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்றான்.
அதற்கு அந்தப் பெண்மான் "''அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். என் குட்டிகளை இளைய பெண்மானிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள். என் குட்டிகள்மீது சத்தியம்' என்றது.
மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந் தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.
அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது. அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின்மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம்.
ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து "''வேடனே" என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்' என்றது.
வேடன் அதற்கும் அனுமதி தந்தான். 
மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது.
அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண் மான் "''ஐயா" என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டது.
அதற்கும் அனுமதியளித்த வேடன் அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.
தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் நடந்த நிகழ்ச்சியைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. "''வேடனுக்கு பலியாக நான் செல்கிறேன்'' என்று ஒரு மான் சொல்ல "''இல்லை நான்தான் போவேன்'' என்றது இன்னொன்று இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன.
ஒருவர் உயிரைத் தியாகம் செய்து மற்ற இருவர் உயிர் வாழ்வதைவிட தங்கள் சத்தியத்தைக் காப்பாற்ற மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன. பெற்றோர்கள் பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன.
நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது சிவலிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன.
நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்றோ பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான்.
நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி அவனுக்கு ஞானம் பிறந்தது. அப்போது சிவபெருமான் அங்கு காட்சியளித்து "வேடனே" உன்னையறியாமல் செய்திருந்தாலும் சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்' என்றார்.
ஈசனைப் பணிந்த வேடன் "ஐயனேஇ என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்' என்றான். அவ்வாறே அருளிய சிவபெருமான் பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி "''வேடனே" இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்குவருவார்.
அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார்.
சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் 'வியாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.

அடுத்து
மகாபிரளயத்தின் பின்னர்  சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய் சிவகாமியம்மை மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி சிவனை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை படைக்கும் தேவன்
"பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால்இ பசுந்தயிர்இ பசுநெய்இ கோமயம்இ கோசாணம்) அபிஷேகம் செய்து மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும் தாமரைப் பூவால் அர்ச்சனையும்இ அலங்காரமும் செய்து பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்துஇ நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும் சந்தன காப்பு சாற்றியும் வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும் அர்ச்சனைகள் செய்தும் இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யசுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள்
பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும் சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும்இ மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இந்த
நான்காவது கால பூஜை
முப்பத்து முக்கோடி தேவர்களும்இ முனிவர்களும்இ ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்புச் சாறு, பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும்இ தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. 
மிக உயர்வான இந்த மஹா சிவராத்திரி விரதமிருந்து  இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்கிறதுபுராணங்கள்.சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

No comments