தமிழ் தேசியத்தை வளப்படுத்தக்கூடியவர்களுடன் இணையத்தயார்-பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம்

தமிழ்த் தேசியத்தை வளப்படுத்தக் கூடிய விதத்திலேயான அரசியல் நடவடிக்கைகளுக்கு கைதரக் கூடிய அரசியற் கட்சிகளுடன் சேர்ந்து இணைந்துசெயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகஇலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை(17-02)பிற்பகல் மட்டக்களப்ப நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தலைமையில் சென்ற குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர்,

இன்று கிழக்குத் தமிழர் ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பைப் பேணுகின்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். நாங்கள் அதற்குச் சாதகமான பதிலை வழங்கியிருக்கின்றோம்.

அரசியற் கட்சிகள் என்ற ரீதியில் எங்கள் மத்தியில் இருக்கின்ற கொள்கைகளுக்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படாத வகையிலே தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலே இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றோம்.

இந்த அடிப்படையில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அதன் பின்னர் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை ஏற்படுத்தி தமிழ்த் தேசியத்தை வளப்படுத்தக் கூடிய விதத்திலேயான அரசியல் நடவடிக்கைகளுக்கு கைதரக் கூடிய அரசியற் கட்சிகளுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு நாங்கள் முதல்நிலை அளவிலே அதற்கான சம்மதத்தை வழங்கியிருக்கின்றோம்.

இதற்குப் பின்னரான அவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் நாங்கள் எமது கட்சியின் மத்திய குழு, மற்றும் எமது அரசியற்குழு என்பவற்றோடு ஆராய்ந்து அதனடிப்படையில் எங்கள் முடிவுகளை வெளியிடுவோம்.

குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழர்கள் எல்லாம் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் எல்லோரையும் ஒரே அணியின் கீழ் திரட்டி எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுப்பதற்கு நாங்கள் எங்களாலான ஒத்துழைப்பை வழங்குவோம் என்கின்ற உறுதியையும் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.

இப்போது முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி எமது அவதானிப்பில் இருந்து அது இப்போது இருக்கின்ற தேசிய அரசாங்கத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்கின்ற பார்வை எங்களுக்கு இருக்கின்றது. மாற்றம் ஏற்படுவதாக இருந்தால் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் ஆனால் தேசிய அரசாங்கம் தொடர்ச்சியாக 2020 வரை இருக்கும் என்று நம்புகின்றோம். அது இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

ஏனெனில் இந்த புதிய அரசாங்கம் அமைந்த போது இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு எதிரான நிலைமை, மனித அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கின்ற நிலைமை, ஜனாதிபதியின் ஏகபோக உரிமைகள் இல்லாமல் செய்கின்ற நிலைமை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களின் நீடித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் விதத்திலான ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற இலக்கைக் கொண்டதாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.

அந்த வகையிலான செயற்பாடுகள் தொடர வேண்டும் என்று நாங்கள் உறுதியோடு இருக்கின்றோம். அந்தவகையில் இப்போது வந்திருக்கின்ற தேர்தல் முடிவு ஒரு சிறிய சலசலப்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு நிகழ்வாக இன்னும் சொல்லப் போனால் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஒரு உற்சாகம் கொடுத்த ஒரு செய்தியாக இருந்தும் கூட, சபைகளை அமைப்பது தொடர்பில் அவர்கள் சிக்குண்டுள்ள விதமும், மஹிந்த அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது எடுத்த 47 வீதமான வாக்குகளுக்குக் குறைவாக தற்போது 44 வீதமான வாக்குகளையே பெற்றிருக்கின்றார் என்கின்ற செய்தியையும் ஊடறுத்து உள்நுலைந்து பார்க்கின்ற போது தென்பகுதி மக்கள் அவரது கோரிக்கைக்கு அமோக வரவேற்பைக் கொடுக்கவில்லை. இன்னுமொரு செய்தி என்னவென்றால் அவர் முழுக்க முழுக்க துவேசத்தையும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான விடயங்களையே முன்வைத்திருக்கின்றார்.

இதனடிப்படையில் பார்க்கும் போது அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதரவை விட குறைந்தளவு ஆதரவு தான் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தான் நாங்கள் அறிவு பூர்வமாக நோக்க வேண்டிய விடயம். உணர்வு பூர்வமாக இதனைப் பார்த்து அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் போய்விட்டது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடைய எதிர்பார்ப்பு இனிமேல் முன்னெடுக்கப்பட முடியாது என்ற தப்பபிப்பிராயங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.