மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடுசெய்தது.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித பொகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவில் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,இலங்கை தேசிய பாரிசவாத சங்கம உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பமாகிய நடைபவனி, பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.

இந்த நடை பவனியில் நாடெங்கிலும் இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் சுமார் 5000பேர் கலந்துகொண்டனர்.

பாரிசவாதம் தவிர்க்கப்படக்கூடியது,குணப்படுத்தக்கூடியது,உடனடியாக முதல் மூன்று மணித்தியாலங்களில் வைத்தியசாலையை நாடினால் முக்கியமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நாடினால் சில வேளைகளில் உங்கள் பாரிசவாதத்தை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊசி,மருந்துகளும் ,இதர சிகிச்சைகளும் ஆளணியினரும் உள்ளனர் என்பதை சொல்வதற்காகவே இப் பாத நடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.