எங்களது கொள்கையுடன் உடன்படக்கூடியவர்களுடன் இணையத்தயார் - பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையுடன் உடன்படக் கூடிய எல்லாக் கட்சிகளும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சபையை அமைப்பதற்கு ஒத்துழைத்து சபை நடவடிக்கைகளைக் கொண்டு சென்று இந்த சபைகளால் மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஏராளமான பொய்ப்பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து மக்கள் மீட்சியடைந்து மிகத் தெளிவுடன் வாக்களித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உள்ளுராட்;சி மன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கின்றது. வடகிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பொய்ப்பிரசாரங்களை முகங்கொடுத்திருந்தது.

அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம் இருப்பினும் தேர்தலுக்கு முந்திய தினங்களில் பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், போதைப்பொருட்கள் வழங்கும் செயற்பாடுகளில் பல கட்சிகள் செயற்பட்டன.
இவற்றை மூலதனமாகக் கொண்டு அவர்கள் செயற்பட்டது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மக்கள் தங்கள் வாக்குகளை இயல்பாக வழங்க வேண்டும் என்ற முறையை இது பிறவழிப்படுத்துகின்ற செயலாக இருந்தது. இதனால் எமது வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இதனால் எங்களுக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டார்கள் என்பது ஜனநாயகத்திற்கான பெரிய சவாலாகும். அதிகளவான பணப்புழக்கங்கள் இருந்தன. இந்த நிலைமைகளைக் கூட எதிர்கொண்டு எமது வடகிழக்கு மக்கள் தங்கள் ஆதரவை எமக்குத் தான் வழங்கியிருக்கின்றார்கள். ஓரிரண்டு சபைகளைத் தவிர ஏனைய எல்லாச் சபைகiளிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

சுமார் 40 சபைகள் எமது ஆதிக்கத்திற்குள் வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால். புதிதாக வந்திருக்கின்ற தேர்தல் முறை இதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனநாயகத்திலே பெரும்பான்மை மக்களினுடைய அபிப்பிராயத்தின் அடிப்படையில் சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைமையை முற்றாக மாற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற சபைகளில் கூட நாங்கள் பல சவால்களை எதிர்நோக்கக் கூடியதாக இருக்கின்றது.

உதாரணமாக மட்டக்களப்பு மாநகர சபை 33 உறுப்பினர்களுக்குரிய சபையாக இருக்கின்றது. நாங்கள் 20 வட்டாரங்களில் 17 உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு பார்க்கும் போது அறுதிப் பெரும்பான்மையோடு நாங்கள் இருக்கின்ற வேளை பிறகு நடைபெற்ற கணிப்பின் பிரகாரம் 33 உறுப்பினர்களுடன் இன்றும் 05 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு 38 உறுப்பினர்களுக்குரியதாக மாநகர சபை மாற்றப்பட்டிருக்கின்றது.

எனவே எங்களது இந்த அறுதிப் பெரும்பான்மையைக் கூட நாங்கள் மாற்றி எங்களுக்கு தற்போது ஓரிரு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டி இருக்கின்றது. இது உண்மையிலேயே ஜனநாயகத்திற்கு ஒர் பெரிய சவாலாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கின்றது. உண்மையில் நான் நினைக்கின்றேன் இலங்கை முழுவதும் இப்பிரச்சினை இருக்கின்றது என்று.

அந்த வகையில் எங்களது கொள்கையுடன் உடன்படக் கூடிய எல்லாக் கட்சிகளும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சபையை அமைப்பதற்கு ஒத்துழைத்து சபை நடவடிக்கைகளைக் கொண்டு சென்று இந்த சபைகளால் மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இது இவ்வாறு இருக்க எமது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வெற்றிபெற்ற எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு சீனவெடிகளைக் கொழுத்தி அவர்களைக் கவலையடையச் செய்திருக்கின்றார்கள். இதனால் எமது வெற்றிபெற்ற உறுப்பினரின் மனைவியான கர்ப்பினித் தாயொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது. இதே போல் வந்தாறுமூலை, கல்லடி போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான சீனவெடி கொழுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தேர்தல் முடிந்ததன் பிறகு தோல்வியைத் தழுவிய அல்லது ஓரிரு இடங்களில் வெற்றி பெற்ற அல்லது மேலதிக ஆசனங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு ஜனநாயகத்தைத் துஷ்பிரயோகம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஏராளமான பொய்ப்பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து மக்கள் மீட்சியடைந்து மிகத் தெளிவுடன் வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறு எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சி சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையில் இந்தத் தேர்தல் முறை முன்பிருந்த விகிதாரசத் தேர்தலாக அல்லது வட்டாரத் தேர்தலாக இருந்திருக்கும் என்றால் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாச் சபைகளையும் வடகிழக்கு எங்கும் பெற்றிருக்கும். கவலைப்படக் கூடிய விதத்திலே இந்தத் புதிய தேர்தல் முறை எங்கள் எல்லோரையும் குழப்பிக் கொண்டிருக்கின்றது. அந்த அந்த சபைகளையும், அதன் சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டு எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை அடிப்படையில் சேர்த்துக் கொண்டு மக்களுக்கான பயணத்தைத் தொடருவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்த வரையில் நாங்கள் எங்கள் தேர்தல் பிரசாரத்தில் சொல்லியிருந்தொம் அரசியலமைப்பு நடவடிக்கை அரைவழித் தூரத்திற்கு வந்திருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுற்றதும், அடுத்த கட்டமாக மிகுதி அரைப்பங்கையும் நடைமுறைப்படுத்தகின்ற விடயத்திற்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லுகின்ற போது எமது மக்களின் அதிகரித்த ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றதென்பதைக் காட்ட வேண்டும் என்று. அதற்கேற்ற வித்தத்தில் நாங்கள் அதற்கு ஆவலாகவும் இருந்தோம்.

ஆனால் இந்தத் தேர்தல் முறை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகரித்த ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்ட போதிலும் சபைகளை அமைப்பதில் ஏற்பட்டிருக்கின்ற இந்தச் சிக்கலானது இதை ஒரு தெளிவற்ற நிலைமைக்குக் காட்டியிருக்கின்ற அதே நேரத்தில் தென்பகுதித் தேர்தல் முடிவுகள் எங்களை இது தொடர்பில் ஆழ்ந்து சிந்திக்க வைத்திருக்கின்றது.

இருப்பினும் உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகள் பாராளுமன்றத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. இதில் மஹிந்தவாக இருந்தாலும் சரி ஏனைய தலைவர்களாக இருந்தாலும் சரி புதிய  அரசியல் அமைப்புத் தேவை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வு என்பது மிகவும் முக்கியமானது என்பதை மிகவும் அடிப்படையாகக் கொண்டு உள்ளுராட்சி சபைகளினூடாகப் பெற்றிருக்கின்ற இந்த வெற்றியை தங்களுடை தலைகளுக்குள் கொண்டு சென்று மமதை அடையாமல் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் இந்தக் கூட்டு எதிரணியினர் செயற்பட்டு இதனை முழுமையாக்குவதற்கும் நாட்டை முன்னேற்றம் அடைவதற்கும் ஒத்துழைக்க வேண்டும்.