வாகரையில் யானை உயிரிழப்பு-தொடர்ரும் யானைகளின் மரணம்

மட்டக்களப்பு வாகரை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட தோணிதாட்டமடு பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (21) இரவு வேளை குறித்த குடியிருப்பு பகுதியில் உள்நுளைந்து காயமடைந்த காட்டு யானையொன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.

 குறித்த யானைக்கு முதுகில் பாரிய காயம் ஒன்றும் காணப்படுகின்றது.
 மக்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 80 மீற்றருக்கு அருகில் குறித்த யானை இறந்து கிடக்கின்றது.

இரண்டு நாட்களாக குறித்த யானைக்கு அம்பாரையில் இருந்து வருகைதந்த வைத்திய குழுவினர் சிகிச்சையளித்தும் பயனளிக்காத நிலையில் நேற்று (23) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளதென குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த யானை இறந்த பின்னர் உரிய அதிகாரிகள் இருவரைக்கும் வந்து குறித்த யானையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெனவும், சுகாதர பிரச்சினை காரணமாக விரைவில் குறித்த யானையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 70 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள எல்லைக் கிராமமான தோணிதாட்டமடு பிரதேசத்திற்கு இதுவரை காலமும் யானை பாதுகாப்பு வேலி அமைத்து தரப்படவில்லை அதிகாரிகள் கண்டும் காணாதுபோல் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.