மாவடிமுன்மாரியில் பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் -மண் கொண்டுசெல்லும் வாகனங்கள் மறிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேச மக்கள் இன்று வியாழக்கிழமை (18-01)காலை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவடிமுன்மாரி பிரதான வீதியானது மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களினால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுவருவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியே இந்த வீதிமறியல் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட தாந்தாமலை தொடக்கம் கொக்கட்டிச்சோலை சந்தி வரையான பாதை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் இந்த வீதிகளினால் தினமும் மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் செல்வதனால் வீதிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை மறித்து வீதிக்கு நடுவே நின்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் தமது பகுதிகளில் உள்ள மண்ணை வேறு பகுதிக்கு கொண்டுசெல்வதை நிறுத்துமாறும் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.

மாவடிமுன்மாரி பகுதியில் மணல் ஏற்றுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மண் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படடுள்ளதாகவும் இதன் காரணமாக தமது வளங்கள் சுரண்டப்படுவதுடன் வீதிகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்.

“எங்களது பாதையினை அழிக்காதே,எங்களது வளங்களை சுரண்டாதே,நோயற்ற வாழ்விற்கு உறுதி கூறுவீர்களா?,எங்களது உரிமையையும் வளத்தினையும் அழிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஸ்தலத்திற்கு வருகைதந்த பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ் மற்றும் பட்டிப்பளை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர்.

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மண் ஏற்றுவதை உடடினாயாக நிறுத்துமாறும் குறித்த வீதியின் கனரக வாகனத்தில் மண் கொண்டு செல்வதை நிறுத்துமாறும் பிரதேச செயலாளர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்தினை கைவிட்டதுடன் தமது பகுதிக்குரிய மண்ணை வேறு பகுதிக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறும் கோரும் கடிதம் ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

தாந்தாமலை தொடக்கம் கொக்கட்டிச்சோலை சந்தி வரையான பகுதி கடும் மோசமான நிலையில் இருப்பதாகவும் குறித்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் பிரதேச செயலாளரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.