அடிப்படை அரசியல் அறிவு அற்ற விதத்தில் தேர்தல் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். போரதீவுப்பற்று சுயேட்சை வேட்பாளர் வி.ஆயுஷ்மன் காட்டம்

(பழுகாமம் நிருபர்)
அடிப்படை அரசியல் அறிவு அற்ற விதத்தில் தேர்தல் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என போரதீவுப்பற்று சுயேட்சை குழு தலைமை வேட்பாளர் வி.ஆயுஷ்மன் இன்று(28) பழுகாமத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், 


பல அரசியல்வாதிகள் தேர்தல்களுக்காக பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்துவருகின்றமை மக்களிடையே நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. எமது சுயேட்சை குழுவை பற்றி அவதூறான பிரச்சாரங்களை மேற்கொண்டு தாங்கள் நல்லவர்களாக மக்களிடம் புடம்போட்டு காட்டுவதற்கு முனைகின்றார்கள். ஆனால் மக்கள் அரசியலில் மிகவும் தெளிவாக உள்ளனர். எதிர்வருகின்ற தேர்தலில் மக்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள். 
இவ்வாறு பொய்யான, தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வெல்லலாம் என மனக்கோட்டை கட்டி கொண்டிருக்கும் வேட்பாளர்களுக்கும்,  தங்களின் முன்னைய வரலாறுகளை மறந்து மற்றவர்களை தூற்றி செய்யும் அரசியலுக்கும் மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம். ஆகவே மக்களே இவர்களின் பசப்பு  வார்த்தைகளை தூக்கி எறிந்து இளைஞர்களாகிய எம்மை மக்கள் சேவை செய்வதற்கான ஆணையை வழங்குவீர்களானால் மக்களாட்சி புரிவதற்கு நீங்களும் பங்குதாரர்களாக மாறுங்கள்.  போரதீவுப்பற்றில் சுயேட்சை குழு 02 ஆதரித்து மக்களாட்சிக்கு அத்திவாரமிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுயேட்சை குழுக்களின் சின்னம் தனித்துவமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மான் சின்னத்தில் நாங்கள் போரதீவுப்பற்று பிரதேச சபையில் மாத்திரம்தான் போட்டியிடுகின்றோம். ஏனைய மாவட்டங்களில் வேறு சுயேட்சை குழுக்கள் மான் சின்னத்தில் போட்டியிடலாம். அந்த குழுவுக்கும் எமது சுயேட்சை குழுவுக்கும் எதுவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை ஒழுங்கான அரசியல் சாணக்கியமுள்ள நபர்கள் அறிவார்கள். எமது சுயேட்சை குழு முஸ்லிம்களுடன் இணைந்து போட்டியிடுவதாக மக்களால் ஓரங்கட்டப்பட்ட கட்சிகளின் ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.  இவர்களின் அரசியல் நிலை பூச்சியம் எனவும் 
பிரதேச சபை அதிகாரத்திக்குட்பட்ட அனைத்து சேவைகளையும் எந்தவிதமான பாகுபாடுமின்றி வழங்குவதற்கும் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.