கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு பொருளாதாரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலை குறித்தும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் இருப்புகள் குறித்தும் விசேட கூட்டமொன்று சனிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை துளசிமண்டபத்தில் இந்த விசேட கூட்டம் நடைபெற்றது.

சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன்,சிரேஸ்ட ஆய்வாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புத்திஜீவிகளும், கல்விமான்கள்,சமூக சேவையாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான புத்திஜீவிகளும், கல்விமான்கள்,சமூக சேவையாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டமாக இது நடைபெற்றது.

யுத்ததின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் பொருளாதார அபிவிருத்தி,அரசியல்செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்கொண்டுசெல்லவேண்டிய பணிகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணசபையினை தமிழர்கள் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய வியுகம் குறித்தும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கடந்த காலத்தில் தமிழர்களை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தினை கைப்பற்றியவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் வெளியிடப்பட்டன.

இதன்போது முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டன.தமிழர்கள் வாழும் பகுதிகளை மையப்படுத்தியதாக கொண்ட பிரதேச செயலகப்பிரிவில் இருந்து ஐந்து பேர் கொண்டதாக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன.

எதிர்வரும் சில வாரங்களில் அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறானா குழுக்கள் அமைக்கப்படவுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்திலும் இவ்’வாறான கூட்டங்கள் நடாத்தப்பட்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.

இறுதியாக மூன்று மாவட்டங்களையும் இணைத்ததான குழுவொன்று அமைக்கப்பட்டு எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு எந்தவித அரசியல்சார்பும் அல்லாமல் முழுமையான பொது அமைப்பாக இயங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.