தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிலர் பலவீனப்படுத்த முயற்சி –ஜனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை பிரிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்காக பெரும்பான்மை கட்சிகளின் உதவியுடன் பலர் களமிறக்கப்பட்டிருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்னஊறணியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு சின்னஊறணி நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி சத்தியசீலனின் தேர்தல் செயற்பாடுகளுக்காக இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் ,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கருணாகரம்,

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அந்தந்த வட்டாரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கின்றது. வட்டார முறையும் விகிதாசார முறையும் கலந்த கலப்பு முறைத் தேர்தலாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாநகரசபையை பொறுத்தவரை 20 பேர் வட்டார முறையிலும் 11பேர் பட்டியல் முறையிலும் தெரிவு செய்யப்பட்டு 33பேரைக்கொண்ட ஒரு மாநகரசபையாக இயங்க இருக்கின்றது. ஒரு வட்டாரத்திலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்னும் பல கட்சிகள் இருந்தன. இன்று மூன்று கட்சிகள் உள்ளன. சில கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அண்மையில் பிரிந்து சென்றிருக்கின்றன.

கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களினால் தமிழ் மக்களான எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டுமானால் சுதந்திரமான சுயாட்சியுடனான ஒரு தீர்வு கிடைக்கவேண்டுமானால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிற்க வேண்டிய தேர்தலாக இது அமைய வேண்டும்.

கடந்த காலங்களில் பலம் பொருந்திய ஒரு இனமாக நாங்கள் இந்த நாட்டில் இருந்தோம். அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பலம் மிக்க ஒரு அமைப்பாக இருந்தோம். எமது இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக ஒரு நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் இன்று இருக்கின்றோம். பாராளுமன்றமானது எமக்கு தீர்வினை கொண்டுவரக்கூடிய அரசியல் சாசன சபையாக இன்று மாறியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த இருவர் அந்தக் குழுவில் இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இன்று நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம். மகிந்தவின் ஆட்சி நடைபெற்ற கொடூரமான காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் பயந்தனர். இன்று வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் ஒத்துழைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அந்த கொடுங்கோல் ஆட்சி மாற்றப்பட்டு நல்லாட்சியை கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நிலையில் இன்று எத்தனையோ பேர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள் தான் தமிழர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என படகிலும் யானையிலும் கையிலும் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆலோசனையின் கீழ் சுயேட்சையாகவும் தமிழ் மக்கள் மத்தியில் களம் இறங்கியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை பிரிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்காக பெரும்பான்மை கட்சிகளின் உதவியுடன் இவர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான நிலையிலிருந்தது. இன்று சில சக்ஷதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைவடையச் செய்யக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.

இம்முறை தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளுக்கு ஒரு பாடத்தினை புகட்டி அவர்களை மீளவும் கட்சிக்குள் வரவைப்பதற்கான ஒரு தேவை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. காரணம் யாதெனில் நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நாங்கள் பல இழப்புகளை சந்தித்திருக்கின்றோம்.

ஆயிரக்கணக்கான போராளிகளையும் இலட்சக்கணக்கான பொது மக்களையும் நாங்கள் இழந்திருக்கின்றோம். இவர்கள் அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய வேண்டுமானால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

அந்த தீர்வினை கொண்டுவரக்கூடிய அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இருக்கின்றது என்பதை உறுதியாக கூற முடியும்.  ஒவ்வொரு வட்டாரத்திலும் 95சதவீதமான வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அளிப்பதன் மூலம் ஒருவரையல்ல இருவரை தெரிவு செய்யக்கூடிய வாக்குப் பலம் உங்களிடம் இருக்கின்றது.