News Update :
Home » » திருவிழாக்களில் கடை வைப்பவர்களைப்போல் சிலர் செயற்பட்டுவருகின்றனர் –துரைராஜசிங்கம்

திருவிழாக்களில் கடை வைப்பவர்களைப்போல் சிலர் செயற்பட்டுவருகின்றனர் –துரைராஜசிங்கம்

Penulis : kirishnakumar on Monday, January 8, 2018 | 9:06 AM

தேர்தல் காலங்களில் திருவிழாக்களில் கடைவைப்பவர்கள்போல சிலர் பொருட்களை மக்களுக்கு கொடுத்து வாக்குகளை வாங்களாம் என முயற்சிக்கின்றனர்.ஆனால் அவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவாகவே இருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்னஊறணியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு சின்னஊறணி நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி சத்தியசீலனின் தேர்தல் செயற்பாடுகளுக்காக இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் ,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
இந்த உள்ளுராட்சி தேர்தல் மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகின்றது.தெற்கில் பலம்வாய்ந்த தலைவர் யார் என்பதை நிரூபிக்கவேண்டியதேவையுள்ளது.வடகிழக்கில் தமிழ் மக்களின் ஒற்றுமை பலம் எந்தளவுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கவேண்டியதாகவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் வெறுமனே அபிவிருத்திகளை மட்டும் சொல்பவர்கள் அல்ல.தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புடைய அனைவரும் ஆழமான அரசியல் அறிவினைக்கொண்டவர்களாகும்.
தமிழ் மக்கள் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக தென்னகம் மகிழ்ச்சி கொண்டாடினாலும் கூட இந்த நாட்டில் உள்ள தமிழர்கள் உரிமையுடன் வாழவிரும்புகின்றனர்,அவர்களது தலைமையினை தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் வழங்குகின்றது மக்கள் ஆணையை தொடர்ந்து மக்கள் வழங்கிவருகின்றனர்  அதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் அரசியல் திட்டத்தினை இந்த நாடு அங்கீகரிதேயோகவேண்டும் என்ற செய்தி சொல்லப்படும் அதேவேளையில் தமிழ் மக்களின் இத்தகைய உறுதியான பிரதிநிதித்துவத்தினை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்பதனை சர்வதேச சமூகம் சொல்வதற்கும் இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஒரு களமாக இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்படும்போது பல கட்சிகள் வாக்குகளை கேட்டுவருகின்றனர்.தனிப்பட்ட கட்சி நலனையும் புறந்தள்ளிவைத்துவிட்டு செயற்பாட்டு ரீதியில் காட்டுகின்ற ஒரேயொரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.எங்களோது வந்து சேருங்கள்,எங்களோடு இணைந்துசெயற்படுங்கள் என்றே தமிழர்களை மூலதனமாக கொண்டுள்ள எல்லா கட்சிகளையும் கேட்கின்றோம்.
ஆனால் தற்போது உதயசூரியனில் வந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி,தற்போது தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என எங்களது பெயரை ஒத்த பெயரை வைத்துள்ளனர். இவர்களை எங்களுடன் இணைந்து செயற்படுமாறு கோரியபோது சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அதாவது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை,தலைமைப்பொறுப்பு என்பனவற்றை கோரியபோது மக்களினால் அங்கீகரிக்கப்படாத விடயத்தினை உங்களுக்கு தரமுடியாத நிலையில் இருக்கின்றோம் என்று கூறியதை பொறுத்துள்கொள்ளமுடியாது பிரிந்துசென்றுள்ளனர்.
ஒரு பெரிய குடும்பம்,அந்த குடும்பத்தில் எத்தனையோ பிரச்சினைகள்,அந்த பிரச்சினைகளை அந்த குடும்பத்தில் தலைமை தாங்குபவர் மிகவும் பொறுப்பாக கையாண்டுகொண்டிருக்கின்றார்,அந்தவேளையில் சில அற்ப விடயங்களை கூறிக்கொண்டு எமது குடும்பத்தினை அவமானப்படுத்தவேண்டும் என்று வீதிக்கு சென்று அந்த குடும்பத்தினைப்பற்றி குறை கூறுபவர்கள்போன்று சில தமிழ் கட்சிகள் எங்களை விட்டு பிரிந்துசென்றுள்ளனர்.
இந்த பெரிய,கௌரவமான குடும்பம் இந்த நாட்டின் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் அர்த்தபுஸ்டியுடன் கொண்டுசெல்லும் ஒரு பெரிய கட்சியுடன் இணைந்து உழைக்காமல் சிறியசிறிய அற்ப காரணங்களுக்காக விலகிச்சென்றிருக்கின்றவர்கள் வாக்கு கேட்டுவந்தால் இத்தனை கஸ்;டங்களுக்கு மத்தியில் கூட்டை உருவாக்கிக்கொண்டு இன்னும் அதனை பாதுகாத்துவரும் அவர்களுடன் இணையமுடியாத நீங்கள்,எவ்வாறு எங்களுக்கு தலைமைதாங்கமுடியும் என்னும் கேள்வியை கேளுங்கள்.
பெருந்தேசிய கட்சிகள் எங்களுக்கு தொடர்ந்துசெய்துவந்த அநீயாயங்கள்,அட்டுழியங்கள்,அவமரியாதைகள் அவற்றை அடிப்படையாக கொண்டு அவர்களை விலக்கிவைக்கும் அதேவேளையில் தமிழர்களுக்குள் இருந்து ஒன்றாக வாழமுடியாமல் இருக்கும் ஏனைய தமிழ் கட்சிகளையும் நிராகரிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்தநாட்டு தமிழ் மக்களை பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் ஆல்போல் தழைத்து நிற்கின்றது.அது அறுகுபோல்வேரூன்றுவதற்கான தேர்தலாக இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் இருக்கின்றது.
இந்த நாட்டின் தமிழர்களின் மிகப்பெரும் அடையாளமான தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய வேர்களாக இருக்கின்ற இந்த உள்ளுராட்சிமன்றங்களுக்கு சிறந்தவேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.அடுத்தமாதம் 10ஆம் திகதி ஒரு செய்தியை தமிழ் மக்கள் இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லையென சிலர் மேற்போக்காக சொல்லிக்கொண்டுள்ளனர்.பத்து கோழிக்குஞ்சு பெட்டிகளையும் நான்கு தையல் மெசின்களையும் கொடுத்துவிட்டு சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றனர்.
தற்போது தேர்தல் சட்டங்கள் கடுமையானதாக இருப்பதன் காரணமாக சிலர் அச்சப்படுகின்றனர்.பலர் கோழிக்குஞ்சுகளுடனும் கொப்பு பெஞ்சில்களுடன் வருவதற்கு ஆயத்தமாகவிருந்தனர்.தேர்தல் சட்டம் மிகவும் கடுமையானதாக இருப்பதனால் அதனை செய்யமுடியாமல் இருக்கின்றது.
தேர்தல் காலங்களில் திருவிழாக்களில் கடைவைப்பவர்கள்போல சிலர் பொருட்களை மக்களுக்கு கொடுத்து வாக்குகளை வாங்களாம் என முயற்சிக்கின்றனர்.ஆனால் மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பழமரமாகவும் வானமழையாகவும் இருக்கின்றது.ஏனையவர்களை பொறுத்தவரையில் மழைக்கு முளைக்கும் காலாண்கள்போல் சில உதவிகளைசெய்வதற்குமுன்வருவார்கள், அல்லது வாளியில் இருக்கும் தண்ணிபோல சிறிய உதவிகளை செய்வார்கள்.
இந்ததேர்தலுக்கு பின்னர் அரசியலமைப்பு தொடர்பான அடுத்தக்கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.அரசியலமைப்பு சட்டமாக மாற்றப்படும்போது பல முக்கியமான விடயங்கள் கவனம் செலுத்தப்படவுள்ளன.இந்தநிலையில் தமிழ் மக்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த தேர்தலை மாற்றவேண்டும்.

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger