தமிழ் சமூகத்தினை படுகொலைசெய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் சமூகத்தினை படுகொலை செய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை மாலை பட்டிருப்பு சந்தியில் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முதன்மை வேட்பாளர் வடிவேல் மணிகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சிவநேசன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆலோசகர் எஸ்.ஞானம் உட்பட வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச பொறுப்பாளர் சின்னா மாஸ்டர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முதன்மை வேட்பாளர் வடிவேல் மணிகரன் ஆகியோர் உரையாற்றினர்.

இங்கு தொடர்ந்துகருத்து தெரிவித்த பிரசாந்தன்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேவை,அதன் முக்கியத்துவம் கிழக்கு மாகாண தமிழர்களினால் நன்கு உணரப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் எமது கட்சியின் கொள்கையினை நிராகரித்து மாற்று கருத்துகளுக்கும் பத்திரிகை அறிக்கைகளுக்கும் பின்னால் சென்றதனால் எவையெல்லாம் நடக்கும் என்று அச்சப்பட்டமோ அவையெல்லாம் 2012க்கு பின்னர் நடந்துவருகின்றன.

ஆயுத போராட்டத்தில் இருந்து ஜனநாயக பாதையினை நோக்கிவந்த சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாணசபை அதிகாரத்தினை பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் உட்கட்டுமான அபிவிருத்தி, ஒற்றுமை, உரிமை,சமத்துவம் என்கின்ற பாதையில் அபிவிருத்தியுடன் நிலையான சமாதானத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம்.

2012ஆம்ஆண்டு வரையில் மூன்று இனங்களும் சமத்துவமாக,கௌரவமாக வாழும் நிலையினை ஏற்படுத்தினோம்.ஒரு இனம் மற்றைய இனத்தினை சந்தேக கண்கொண்டு பார்க்கமுடியாத நிலையினையும் ஒரு இனம் மற்றைய இனத்தின் கருத்துக்கு முக்கியத்துவளித்துவாழக்கூடிய சூழ்நிலையினையும் உருவாக்கினோம்.

எனினும் 2008ஆம் ஆண்டு மாகாணசபை அதிகாரங்கள் தேவையில்லை,மாகாணசபை போலியான கைபொம்மை என குறிப்பிட்டவர்கள்,மாகாணசபை என்னும் சொல்லே எங்களுக்கு தேவையில்லையென்ற தமிழ்; தலைமைகள் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபையினை சரியானமுறையில் கொண்டுசென்றபோது 2012ஆம்ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கு சாரைசாரையாக வந்து தமிழனின் கையில் இருந்த கிழக்கு மாகாண நிர்வாகம் தமிழனின் கைகளில் இருக்ககூடாது என கங்கணம் கட்டி செயற்பட்டனர்.

அதன் விளைவாக 2012ஆம் வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நஜீப்.ஏ.மஜீத் அவர்கள் முதலமைச்சராக்கப்பட்டார். பதினொரு ஆசனங்களை கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போகின்றோம் என எல்லோரும் வாக்களித்தார்கள். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

பதினொரு ஆசனங்களை வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் ஏழு ஆசனங்களை வைத்துக்கொண்டு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசின் மூலம் அதிகளவான பயன்களையும் இலாபங்களையும் சலுகைகளையும் தற்களது சமூகத்திற்காக பெற்றுக்  கொடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவியை அவர்களுக்கு வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளையும் அபிலாஷைகளையும் தாரைவார்த்துக் கொடுத்தது. அதன் மூலம் ஹாபிஸ் நஸீர் அவர்கள் முதலமைச்சரானார்.

2008ஆம் வருடம் எதுவெல்லாம் நடந்துவிடக்கூடாது என அஞ்சினோமோ அவையெல்லாம் இரண்டு வருடங்களில் நடந்தது. தமிழர்களின் பிரதேசங்களுக்கு வந்த அனைத்துவிதமான அபிவிருத்திகளையும் ஏறாவூர் பிரதேசத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டது.

இன்றுவரை தமிழ்ப் பிரதேசங்களில் இருக்கின்ற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீகவளப் பற்றாக்குறை,வடிகால் பிரச்சனை,மைதானப் பிரச்சனை,மயானப் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளும் தலைதூக்கி நிற்கின்ற வேளையில் வந்த நிதிகளெல்லாம் ஏனைய பிரதேசங்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது.

தமிழர்களின் நிர்வாகங்கள் பறிக்கப்பட்டன. எல்லைகள் பறிக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை, தமிழர்களின் நில நிர்வாகம் என அனைத்தும் பறிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு இரண்டு வருடங’களில் அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த  நிலைமை மாறவேண்டுமானால் தமிழர்கள் மீண்டும் தலைதூக்க வேண்டுமானால், இந்த நிலைமையிலிருந்து விடுபட்டு தமிழர்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய தமிழர்கள் ஆண்ட மாகாண சபையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அடிப்படையாக இருக்கின்ற உள்ளுராட்சிசபை அதிகாரத்தினை தமிழ் மக்கள் விஷடுதலைப்புலிகள் கட்சியின் பின்னால் அணிதிரண்டு மக்கள் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தினை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இன்று அதன் வெளிப்பாடு தான் தமிழ் மக்கள் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் அணிதிரண்டிருக்கின்றார்கள்.

பட்டிருப்பு பிரதேசம் தமிழர்களின் தனித் தொகுதியாக இருக்கின்ற பிரதேசமாகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். யுத்த காலத்தில் அதிகளவிலான போர்வீரர்களை அனுப்பிய பிரதேசமாகும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த அனைத்து போராளிகளுக்கும், கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி மக்களுக்கும் பதில் கூறவேண்டிய பொறுப்பு இன்று தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு இருக்கின்றது.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்தவர்கள் போராட்ட உச்சக்காலத்தில் தாங்கள் சொகுசாக இருப்பதற்கான வாய்ப்புக்களை தேடிக்கொண்டனர்.

எந்தவொரு நாட்டிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ வெற்றிகள் அரசியல் மயமாக்கப்பட்டால் மட்டும் தான் போராட்டம் முழுமையடையும். விடுதலைப்புலிகள் தங்களுடைய இராணுவ வெற்றிகளை அரசியல் மயமாக்கும் முகமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருந்தார்கள். விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளை அரசியல் மயமாக்குவதாக சொல்லிக்கொண்டு ஆட்சிபீடமேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதனை சரிவரச் செய்தார்களா? அவர்கள் அதனை சரிவரச் செய்யத் தவறியதன் காரணமாக உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகள் அனைத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாக சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டது.

அதன் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்காலில் கொன்றழிக்கப்படுகின்ற வேளையில் சர்வதேசம் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தது.

இராணுவ வெற்றிகளை அரசியல் மயமாக்க முடியாமல் தங்களை தாங்களே ஆளவேண்டிய தமிழ் சமூகத்தினை படுகொலை செய்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிவர்கள்.