பெண் வேட்பாளர்கள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் - திருமதி செல்வி மனோகர்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை உளவியல் ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபையின் வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனைபற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் பெண் வேட்பாளரின் வீடு உடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு பிரிவில் இன்று மாலை முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்ப மாநகரசபையின் வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் மற்றும் வீடு உடைக்கப்பட்ட வேட்பாளர் திருமதி சந்திரிகா சோமசுந்தரம் ஆகியோர் இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபையின் வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர்,

ஆரையம்பதி செல்வாநகர் மக்கள் அனைவரும் இணைந்தே திருமதி சந்திரிகா சோமசுந்தரம் அவர்களை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தினார்கள்.

செல்வாநகர் பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துவருகின்றது.அந்த செல்வாக்கினை தாங்கிக்கொள்ளமுடியாதவர்கள்தான் இந்த சம்பவத்தினை நடாத்தியுள்ளனர்.

குறித்த வீட்டுக்கு வந்தவர்கள் சந்திரிகா அவர்களை தாக்குவதற்கே வீட்டுக்கு வந்துள்ளனர்.அவர் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டுச்சென்றுள்ளனர்.

ஏற்கனவே தேர்தல் ஆணையாளரினால் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறக்கூடாது,பெண்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் மக்கள் பெண்களுக்கு ஆதரவு வழங்கிவரும் இந்த நிலையில் பெண்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

முகப்புத்தகம் ஊடாக பெண்களை கேவலப்படுத்துவதும்,பெண்களை அச்சப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வேதனைக்குரிய விடயமாகும் இதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்,அச்சுறுத்தப்படுவதும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.