மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லையினை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்வேன் -வேட்பாளர் திருமதி செல்வி மனோகர்

மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லையினைப்பாதுகாக்க உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக மட்டக்களப்பு மாநகரசபைக்கு போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பரப்புரைக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாநகரசபைத்தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படவேண்டும்.வெறுமனே நாங்கள் இதனை ஒரு உரிமைக்கான தேர்தலாக மட்டும் நாங்கள் பார்ப்போமானால் இருப்பதையும் இழந்து நிற்கும் சமூகமாக மாறும் நிலையே ஏற்படும்.

முட்டக்களப்பு மாநகரசபையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் இதயப்பகுதியாக காணப்படுகின்றது.இதனைப்பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் பல பகுதிகள் ஊடாக எமது காணிகள் பறிபோய்க்கொண்டுள்ளது.எமது வளங்கள் சுரண்டப்பட்டுக்கொண்டுள்ளது.இவற்றினை தடுத்துநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எமது மாநகரசபையினை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய பாரிய பொறுப்பு எமதுதலையின் மீது சுமத்தப்பட்டுள்ளது.அது விளங்காத சிலர் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் வெற்றிபெற்று அரசியல் தீர்வினைப்பெறப்போவதாக கூறிவருகின்றனர்.இவர்கள் இதனையே தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருப்பார்கள்.அவர்களினால் எமது எல்லையினை பாதுகாக்கமுடியாது.

விடுதலைப்புலிகள் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்காக போராடினார்கள்.எனது மூன்று சகோதரர்கள் இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்காக மாவீரர்களானார்;.அந்தவழியில் இந்த மட்டக்களப்பு மண்னை பாதுகாப்பதற்கு எனது உயிரைக்கூட தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.என்றார்.