ஆரையம்பதியில் வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று வியாழக்கிழமை இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.10மணியளவில் ஆரையம்பதி விளையாட்டு மைதான வீதியில் உள்ள சாமித்தம்பி சிவசுந்தரம் என்னும் வேட்பாளரின் வீட்டின் முன் பகுதியிலேயே இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் இந்த வேட்பாளர் போட்டியிடுகின்றார்.

குறித்த வேட்பாளரும் அவரது மகனும் வெளியில் இருந்து உரையாடிவிட்டு வீட்டினுள் தொலைக்காட்சி பார்க்க சென்று சிறிது நேரத்தில் தாங்கள் உரையாடிக்கொண்டிருந்த பகுதியை நோக்கி இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக குறித்த வேட்பாளரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலின்போது எந்தவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக சந்தேகிப்பதாகவும் வேட்பாளர் தெரிவித்தார்.

தான் ஒரு வேட்பாளர் என்று தெரிந்திருந்திருந்தும் தனது வீட்டுக்’கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னத்தினை சிலர் வரைந்துவிட்டுச்சென்றதாகவும் இதன்போது பொலிஸாரிடம் வேட்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது வீதியில் அமைக்கப்பட்டிருந்த சின்னத்தினையும் அழித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.