கடற்தொழில் அலுவலக உத்தியோகத்தர் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

(லியோன்)


மட்டக்களப்பு  மாவட்ட கடற்தொழில் அலுவலக உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசால அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பாவித்து மீன்பிடி தொழிலில்  ஈடுபட்டுவருவதாக மாவட்ட கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மாவட்ட கடற்தொழில் அலுவலக உத்தியோகத்தர்களினால் வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் வள்ளங்களை சோதனை செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்

இவ்வாறான நிலையில் 12ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இரவு வழமை போன்று மாவட்ட கடற்தொழில் அலுவலகத்தின்  நான்கு உத்தியோகத்தர்களினால் மட்டக்களப்பு முகத்துவாரம் வாவி பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் வள்ளங்களை சோதனை செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர் .

இவ்வாறு சோதனை நடவடிக்கையின் போது சுமார் 15-20 வரையிலான வள்ளங்களில் வருகைதந்த மீனவர்கள் கடற்தொழில் அலுவலக உத்தியோகத்தர்களை தாக்கியதாக  அலுவலக உத்தியோகத்தர்கள் தெரித்தனர் .

இவ்வாறு தாக்குதல் நடத்திய வேளையில்  பலத்த தாக்குதலுக்கு உள்ளான கடற்தொழில் அலுவலக உத்தியோகத்தர் தங்கராஜா பாலமுகுந்தன் என்ற உத்தியோகத்தர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்

குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப்  பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டு வைத்தியசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர் .


இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது