Breaking News

தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜனநாயக போராளிகள் கட்சி செயலர் இ.கதிர் தெரிவிப்பு

(பழுகாமம் நிருபர்)
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என
ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.  ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சில உறுப்பினர்களுக்குமிடையே சந்திப்பொன்று நேற்று (17) பாலையடிவட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து கூறுகையில்,
நீண்ட கால இடைவெளியின் பின்னர் தமிழர் தேசமான வட கிழக்கில் நடைபெற போகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் சவால் மிக்கதாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த தேர்தலில் எமது உரிமை சம்பந்தமாகவோ அல்லது கொள்கை சம்பந்தமாகவோ பேசவேண்டிய தேவை இல்லை. ஆனால் அந்த தேவை இன்று எமக்கு திணிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அபிவிருத்தி சம்பந்தமாக கதைக்க வேண்டிய தருணத்தில் தமிழராகிய எம்மையெல்லாம் உரிமை, தேசியம் போன்றவற்றை பற்றி பேசுவதற்கு மாற்றியிருக்கின்றனர்.  
இனி தமிழர் தரப்பில் இருந்து மீட்சி பெற முடியாது என்று நினைத்த பல கட்சிகளும், உதிரி கட்சிகளும், சுறேட்சைகளும் தலைநிமிர்து தாங்கள் தான் தமிழ் தேசியம் காப்பவர்கள் என்று சொல்லும் அளவிற்கு தமிழராகிய நாங்கள் மாற்றப்பட்டிருக்கின்றோம். எமது கட்சியின் தலைவர் சொன்னார் மட்டக்களப்பில் மக்களுக்கள் இராணுவம் இல்லையென்று, உண்மைதான் இன்றைய சம்பவமான அலுவல திறப்பு விழா தடுத்ததில் இருந்து அறிந்து கொண்டேன். மக்களுக்குள் இராணுவம் இல்லை ஆனால் இந்த ஒட்டுக்குழுக்கள் தான் இராணுவம். 
தென்னிலங்கை கடும்போக்கு ஆட்சியாளர்களினால் சூழ்ச்சிகரமான அரசியல் காய்நகர்த்தல்கள் எம் மக்களிடையே துரோக குழுக்களினூடாக தள்ளிவிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எமது அபிவிருத்தி இன்னும் ஐந்து வருடங்கள் பின்தள்ளப்பட்டாலும் பரவாயில்லை, பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை ஒட்டுக்குழுக்களுக்கும், தென்னிலங்கை நயவஞ்சக அரசியல் வாதிகளுக்கும் இந்த உள்ளுராட்சி தேர்தலினூடாக தக்க பாடம் மக்கள் புகட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க நினைத்தவர்களுக்கும் சரியான பதிலடி  கொடுத்து மாபெரும் வெற்;;;;;றியினை தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் காட்ட வேண்டும்.
சலுகைகளை பெற்றுக்கொண்டு வரும் வேட்பாளர்கள் எங்களது போராளயாக இருந்தாலும் சரி  அவர்களை ஒருபுறம் இருத்தி வையுங்கள். அனைவரும் வீடு வீடாக சென்று மக்களுக்கு சரியான விளக்கத்தை கொடுத்து வெற்றிக்கான பாதையில் தமிழ் தேசியத்தை இட்டுச் செல்ல வேண்டிய காலம் தான் இது. அமிர்தலிங்கம் மற்றும் சிதம்பரம் போன்றவர்களின் தமிழீழ கோட்பாடுகளுக்கு  ஆயுத செயல்வடிவம் கொடுத்தவர் தலைவர் பிரபாகரன். 40000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவரர்கள், தலைவர்கள், தளபதிகள் மற்றும் போராளிகளினால் செயற்பாட்டினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசியம். இந்த நேரத்தில் இதை உடைப்போமாக இருந்தால் தமிழனின் அழிவுப்பாதைக்கான ஆரம்பமாகத்தான் இருக்கும். எனவும் தெரிவித்தார். 
இந்த சந்திப்பானது ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மா.நடராசா போன்றோரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.கதிர், ஊடக பேச்சாளர் எஸ்.துளசி, அனைத்துலக தொடர்பாளர் மலரவன் ஏனைய உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.No comments