மீண்டும் முருங்கை மரம் ஏறும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட இலக்கிய விழாவுக்கு ஒரு குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் மாவட்ட செயலகம் தொடர்பில் சில விமர்சனங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டபோது சில ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டது.

இதன்போது தங்களுக்கு சாதமாக செய்தி எழுதும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே செய்திசேகரிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் அண்மையில் புதிய அரசாங்க அதிபராக எம்.உதயகுமார் பதவியேற்றதை தொடர்ந்து ஊடகவியலாளர்களினால் மாவட்ட செயலகத்தில் சில ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பிலும் உரிய நடவடிக்கையெடுக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உத்தியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் எந்தவித மாற்றங்களும் நடைபெறாத நிலையில் கடந்த காலத்தினைப்போன்று மீண்டும் அதேபாணியில் சில ஊடகவியலாளர்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற மாவட்ட கலை இலக்கிய விழாக்களுக்கு மட்டக்களப்புக்கு வெளி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உண்மைத்தன்மையுடன் செயற்படும் ஊடகவியலாளர்களை மாவட்ட நிகழ்வுகளுக்கு அழைக்காமல் இருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.