மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியின் காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இடம் வவுணதீவு பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனையில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த முற்றுகையிடப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.நசீர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்ட நிலையில் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முற்றுகையின்போது கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் 540 லீ;ற்றர் கோடா மற்றும் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மீட்கப்பட்டதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.நசீர் தெரிவித்தார்.

இலங்கையில் வறுமையான பிரதேச செயலகத்தில் முதல் இடத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் சட்ட விரோத மதுபாவனையினை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தப்பிச்சென்றுள்ள சந்தேக நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.