தமது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி –தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி குற்றச்சாட்டு

மகிந்த ராஜபகஸவுடன் தமது கட்சி இணைந்து உள்ளுராட்சிசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக சில அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் தமது கட்சிக்கு களங்கத்தினை ஏற்படுத்துவம் வகையில் கருத்துகளை தெரிவித்துவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இம்முறை தனித்து படகுச்சின்னத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் எட்டு உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில்’ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் முன்னிலையில் வேட்பாளர்கள் தமதுவேட்பு மனுக்களில் கையெழுத்திட்டனர்.

வேட்புமனுக்கள் கையெழுத்திடும் பணியை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் விசேட செயதியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் பிரிவு தலைவி திருமதி செல்வி மனோகர் ஆகியோர் கருத்துகளை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 208வேட்பாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் இம்முறை அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரசாந்தன் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரசாந்தன்,

கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துவமாக போட்டியிடுகின்றது.எமது தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையின் கீழ் உள்ளுராட்சிசபைகளை வழங்குவதற்கு தமிழ் மக்கள் இம்முறை அணிதிரண்டுள்ளனர்.

இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிவருகின்றனர்.எங்களுக்கு 208 வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக எங்களிடம் 480க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை தந்திருந்தனர்.அதில் 208பேர் தெரிவுசெய்யப்பட்டு வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பின்னர் தமிழ் மக்கள் அணிதிரள்வதை பொறுக்கமுடியாத சில ஊடகங்களும் அரசியல் தலைமைகளும் எமதுகட்சியின் நற்பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தனித்துவமாக படகு சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வழிநடத்தலில் போட்டியிடுவதாகவும் படகுசின்னம் மொட்டுச்சின்னம் என தொடர்புபடுத்தி பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துவமாக படகு சின்னத்திலேயே போட்டியிடுகின்றது.ஆட்சியமைக்கும்போது மக்களுக்கு சேவையாற்ற ஆளும் அரசுடன் மக்களுடன் சேவையாற்றுவதற்காக எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் இணைந்து பணியாற்ற தயாராகவிருக்கின்றோம்.

அதிகார பரவலாக்கலுக்கு எதிராக பேசும் செயற்படும் கட்சிகளுடன் இணைந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் தயாராகஇல்லை.இணக்க அரசியல் செய்யும்போதும் தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுத்தே செயற்பட்டுவந்தோம்.

அதேபோன்று கிழக்கு மக்களுக்கு எந்த அரசியல் கட்சி சாதகமான சமிக்ஞையை காட்டுகின்றதோ மத்திய அரசாங்கத்தில் உள்ள கட்சி கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை பேசி தீர்க்கமுன்வருகின்றதோ அந்த கட்சிகளுடன் இணக்க அரசியல் செய்வோமே தவிர எந்த கட்சியுடனும் சங்கமமாகி பேரினவாதிகளுக்கு விட்டுக்கொடுக்க எமது கட்சி தயாராகயில்லை.

உள்ளுராட்சிசபையென்பது தங்களை தாங்களே ஆளக்கூடிய சபையாகும்.இந்த சபைகளில் போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் முண்டியடித்துக்கொண்டு வேட்பாளர் தெரிவுகளை மேற்கொண்டுவருகின்றது.

குறிப்பாக தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சிசபைகளைபெற்று தமிழர்களுக்கு என்ன சேவை செய்யப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலம் நிர்வாக பிரதேசங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அபகரிக்கப்பட்டுவருகின்றன.அதேபோன்று 07 உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்துக்கொடுத்தது.

பல்வேறு பிரச்சினைகள் கொண்ட உள்ளுராட்சிசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் கொடுத்தால் தமிழர்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்யப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும்.அதனை உணர்ந்தே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பின்னால் தமிழ் மக்கள் அணி திரண்டு உள்ளனர்.

மத்திய அரசியல் மிகவும் பலம்பொருந்திய சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளபோதிலும் அது தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல்வேறு கோசங்களை முன்வைத்தவர்கள் கடந்த வரவுசெலவு திட்ட முன்மொழிவி;ன்போது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான எந்த அழுத்தத்தினையும் வழங்கவில்லை.எந்தவித கோரிக்கையினையும் வைக்காமல் ஆதரவு வழங்கினர்.

இவ்வாறான நிலையில் உள்ளுராட்சி அதிகாரங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வழங்கினால் இருக்கின்ற தமிழர்களின் எல்லைக்கிராமங்களை வரைபடத்தில் பார்க்கும் நிலையினை உருவாக்குவார்கள் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழ் மக்கள் இம்முறை உணர்ந்துவாக்களிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோரிக்கையாகும்.