தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தமிழர்களின் பிரச்சினையாக மாறியுள்ளது –தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் குற்றச்சாட்டு

வடகிழக்கில் உள்ள அனைத்து உள்ளுராட்சிமன்றங்களிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கும் உரிய பிரச்சினையாக இன்று தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளினால் மாறியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கிஸ்தரும் மண்முனைப்பற்று பிரதேசசபைக்காக சுயேட்சையில் போட்டியிடவுள்ள தலைமை வேட்பாளருமான சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் முக்கிஸ்தர்கள் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழரசுக்கட்சி மேற்கொண்டுள்ள ஆசனப்பங்கீடு தொடர்பான பிரச்சினையினால் ஆரையம்பதி தமிழரசுக்கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியே தமிழரசுக்கட்சியின் இருந்து விலகி சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி நிர்வாகசபை உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச தமிழரசுக்கட்சியின் நிர்வாக சபை உறுப்பினருமான சோ.மகேந்திரலிங்கம் தலைமையிலான தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களே இவ்வாறு சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அறிவிறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை இரவு ஆரையம்பதி பிரதான வீதியில் உள்ள சோ.மகேந்திரலிங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு கருத்துகளை சோ.மகேந்திரலிங்கம் முன்வைத்தார்.
நான் இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர்;.2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு யாரும் முன்வராத கட்டத்தில் தமிழ் தேசியத்தினை பாதுகாப்பதற்காக நிர்ப்பந்ததினால் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டவன்.
2012ஆம்ஆண்டு ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாரும் போட்டியிட தயங்கிய நிலையிலும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்போட்டியிட்டவன். சுயேட்சையாக போட்டியிடும் வரைக்கும் தமிழரசுக்கட்சிக்கு விசுவாசமாகவே இருந்துவருகின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் பிரதேச கிளை உருவாக்கப்பட்டபோது ரெலோவின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கட்சிக்குள் புகுந்து இணக்கப்பாடு என்னும் பெயரில் பாரம்பரிய தமிழரசுக்கட்சிக்காரர்களின் விட்டுக்கொடுப்புக்கு மத்தியில் கிளைத்தலைவர் பதவியை பெற்றுக்கொண்டனர்.

அந்த காலத்தில் பல்வேறு அவமதிக்களுக்கு மத்தியிலும் கட்சிக்கு விசுவாசமாக இருந்துவந்துள்ளேன்.அண்மையில் வேட்பாளர் தெரிவுகள் நடைபெற்றபோது தமிழரசுக்கட்சியின் மண்முனைப்பற்று,மட்டக்களப்பு தொகுதிகளின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்தபோதிலும் வேட்பாளர் தெரிவுதொடர்பில் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் இணக்கப்பாடு அடிப்படையில் மண்முனைப்பற்று தவிசாளர் பதவியை புளோட்டுக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.மண்முனைப்பற்று பிரதேசத்தில் புளோட் அமைப்புக்கு எவ்வித ஆதரவாளர்களோ,உறுப்பினர்களோ இல்லாத நிலையில் இந்த இணக்கப்பாட்டை மீள் பரிசீலனை செய்யுமாறு தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரிடம் கேட்டுக்கொண்டேன்.எனினும் அதனை செய்ய அவரால் முடியவில்லை.

என்னை புளோட் இயக்கம் ஊடாக தவிசாளர் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பொதுச்செயலாளர் என்னிடம் கோரிக்கை விடுத்தார்.அந்தகோரிக்கையினை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.இந்த நிலையிலேயே தற்போது தமிழரசுக்கட்சியின் கிளைத்தலைவராக தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் ரெலோவின் ஆதரவாளரான மாணிக்கராஜா அவர்கள் புளோட் அமைப்பு ஊடாக மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு தவிசாளராக வரக்கூடிய வகையில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பச்சோந்தி தனமாக ரெலோவில் இருந்து தமிழரசுக்கட்சிக்கும் தமிழரசுக்கட்சியில் இருந்து புளோட்டுக்கும் போகின்ற மனநிலை என்னிடம் இருக்கவில்லை.இந்த நிலையிலேயே தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி மாற்று தூய தமிழரசுக்கட்சியை கொண்டுசெயற்படவுள்ளேன் என்று கூறி வெளியேறினேன்.

அதன் பின்னர் எமது கிராம மக்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் கருத்துகளைப்பெற்ற பின்னர் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தினேன்.

தூய தமிழரசுக்கட்சியை மண்முனைப்பற்றில் உருவாக்கும்நோக்குடன் சுயேட்சைக்குழுவின் வேட்பாளர்களை எனது தலைமையில் களமிறக்கியுள்ளேன்.ஆரையம்பதி பிரதேசம் நான்கு வட்டாரங்களைக்கொண்டுள்ளபோதிலும் அதில் எந்த வட்டாரத்திலும் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை.

மண்முனைப்பற்று பிரதேசசபை பத்து வட்டாரங்களைக்கொண்டது.இவற்றில் இரண்டு முஸ்லிம்களுக்கு உரியது. ஏனைய எட்டில் தமிரசுக்கட்சிக்கு மூன்றும் புளோட்டுக்கும் மூன்றும் ரெலோவுக்கு இரண்டும் வழங்கப்பட்டதாகவும் இவற்றில் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்பட்ட மூன்று வட்டாரங்களில் ஒன்று தாழங்குடாவுக்கும் புதுக்குடியிருப்புக்கு ஒன்றும்,கிரான்குளத்திற்கு ஒன்றும் வழங்க்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆரையம்பதியை முற்றுமுழுதாக புளோட்,ரெலோவுக்கு கையளிக்கவேண்டியிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் என்னிடம் கூறினார்.

இந்த நிலையில் தமிழ் தேசியத்தில் ஊறி தமிழ் தேசியத்திற்காகவே வாழ்ந்த ஆரையம்பதி மக்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிய நிலையினை எனக்கு உணர்த்தியது.இந்த நிலைப்பாடானது ஆரையம்பதி மக்களை தமிழரசுக்கட்சி அவமதித்துவிட்டதாக கருதவேண்டியுள்ளது.

இந்த நிலையிலேயே ஆரையம்பதியில் உள்ள முக்கிஸ்தர்களின் ஆலோசனையின் கீழ் தூய தமிழரசுக்கட்சியை உருவாக்கும் நோக்குடன் இந்த சுயேட்சை குழுவினை இறக்கியுள்ளோம்.ஆரையம்பதியின் நான்கு வட்டாரங்களையும் தூய தமிழரசுக்கட்சியான எனது தலைமையின் கீழான சுயேட்சைக்குழு கைப்பற்றும் என நான் பூரணமாக நம்புகின்றேன்.
சாதாரணமாக வீட்டில் இருந்து ஏதொவொரு அனர்த்ததினால் வெளியேறும் அனைவரும் சென்றடையும் கூடாரம் சின்னத்தினை எமது தேர்தல் சின்னமாக தேர்ந்தெடுத்துள்ளேன்.

ஆரையம்பதிக்கு செய்த துரோகத்திற்கும் எனக்கு செய்த துரோகத்திற்கும் தமிழ் தேசியத்தினை உண்மையாக காக்கவேண்டும் என்ற நோக்கிலும் ஆரையம்பதி மக்கள் எனது சுயேட்சைக்குழுவுக்கு முழு அங்கீகாரத்தினை வழங்கி,தமிழரசுக்கட்சியில் உள்ள தலைவர்களின் பிழையான தீர்மானங்களை மாற்றியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்மூலம் நான் தமிழ் தேசியத்தில் இருந்து விலகவோ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு,தமிழரசுக்கட்சிக்கு எதிராகவோ விரும்பவும் இல்லை,இனிமேல் விரும்பபோவதுமில்லை.

நான் தமிழரசுக்கட்சியில் இருந்துவெளியேறியதையறிந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,ஈ.பி.ஆர்.எல்.எப்.,கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணி ஆகிய கட்சிகளில் இருந்து என்னை அணுகி தங்களது கட்சியில் போட்டியிடுமாறு கூறினர்.

ஆனால் எனது நோக்கம் முழுவதும் தமிழரசுக்கட்சியின் தலைமைகள் எடுத்த தீர்மானம் மக்கள் கருத்துகளுக்கு முரணானது என்பதை வெளிப்படுத்தி தமிழரசுக்கட்சி மக்களின் கருத்தினை அறிந்து அதற்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்கவேண்டு;ம் என்பதை உணரவைப்பதற்கே நான் சுயேட்சைக்குழுவில் இறங்கியுள்ளேன்.

வடகிழக்கில் உள்ள அனைத்து உள்ளுராட்சிமன்றங்களிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கும் உரிய பிரச்சினையாக இன்று தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் மாறியுள்ளது.மக்களின் கருத்துகளை உள்வாங்காமல் கட்சி தலைமைகள் தங்களது வசதி வாய்ப்புகளுக்கு ஏனைய கட்சிகளுடன் உள்ள இணக்கப்பாடுகளை மையமாக வைத்து எடுக்கும் தீர்மானங்களை மக்கள் எந்தளவுக்கு அங்கீகரிக்கின்றார்கள் என்பதனை அறிவதற்கு எந்த முயற்சியும் இந்த தலைவர்கள் எடுப்பதில்லை.
இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையெடுக்கும் எதெச்சதிகாhர ஜனநாயக விரோத செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.

தமிழரசுக்கட்சியின் ஊடகபேச்சாளர் சுமந்திரனின் எதேச்சதிகார நடவடிக்கைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா போன்றவர்களினாலும் ஏற்றுக்கொள்ளாத நிலையிருந்துவருகின்றது.

இடையில் தமிழரசுக்கட்சிக்குள் வந்த சுமந்திரனுக்கு தமிழர்களின் இழப்பும் தெரியாது தமிழர்களின் வேதனையும் தெரியாது,யுத்த காலத்தில் அனுபவித்த கொடுமையும் தெரியாது.எந்த கஸ்டத்தினையும் அனுபவிக்காது மாடிவீட்டில் குடியிருக்கும் சுமந்திரன் கொழும்பினை மையமாக வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றார்.அந்த தீர்மானங்கள் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்கவின் மீதுகொண்ட உறவுகாரணமாக எடுக்கும் தீர்மானமாகவே தெரிகின்றதே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்வுகளை பிரதிபலிக்கும் தீர்மானமாக பார்க்கமுடியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு தீர்வினைப்பெற்றுத்தரக்கூடிய ஒரேயொரு வழி.இதனைவிட மாற்றுவழியோ மாற்றுத்தலைமையோ வடகிழக்கில் இல்லை.இந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை திருத்தத்திற்கு உட்படுத்தப்படவேண்டும்.அவர்களின் ஏகாதிபத்திய தீர்மானங்கள்,மக்களின் கருத்துகளைக்கொண்டிராத தீர்மானங்கள் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதை மக்கள் பாடம்புகட்டவேண்டும்.