கிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு

கிழக்கு மாகாண இராணுவத்தலைமையகமும் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் இணைந்து நடாத்திய கிறிஸ்மஸ் கரோல் கீத மற்றும் கிறிஸ்மஸ் அலங்கார மரம் திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை (22-12-2017)மாலை சிறப்பாக நடைபெற்றது.

இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தி சுபீட்சமான இலங்கையினை உருவாக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பெர்னான்வெல,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர உட்பட மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் கட்டளை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவின மததலைவர்கள்,இராணுவ சிவில் அதிகாரிகள்,பெருமளவான மூவினங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மிக உயரமான கிறிஸ்மஸ்மரம் மற்றும் பாலன் பிறப்பினை வெளிப்படுத்தும் மாட்டுத்தொழுவம் என்பன அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் இதன்போது தமிழ் சிங்கள கலைஞர்களினால் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டன.
இந்தநிகழ்வில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸை சிறப்பிக்கும் வகையிலான அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டன.