பல்பண்பாட்டு இசைத்திருவிழா 2017

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் அனைத்துப்பீட மாணவர்களையும் ஒன்றிணைத்து பல்பண்பாட்டு இசைத் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

மாணவர்களுக்கான அழகியல் மற்றும் படைப்பாக்க விருத்திக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இசை நிகழ்ச்சியினூடாக பல்கலைக்கழகத்தில் உகந்த சூழலைக் கொணர்ந்து சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் பொருட்டு 'பல்பண்பாட்டு இசைத்திருவிழா 2017' எனும் எண்ணக்கரு ஒழுங்குபடுத்தப்பட்டு, நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமாரின் ஒழுங்கமைப்பு மற்றும் இணைப்பாக்கத்தினால் அனைத்துப் பீட மாணவர்களையும் ஒன்றிணைத்ததாக 11.12.2017 இரவு 7..30 மணியளவில் கிழக்குப்பல்கலைக்கழக பிரதான மைதானத்தில் இசை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கான தொடர்புபடுத்தலை கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜயசிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த மூன்று மாத காலமாக நுண்கலைத்துறைத் தலைவரால் முன்னெடுக்கப்பட்டது. கலைகலாசார பீடாதிபதி திரு.மு.ரவி அவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தார். மாணர்களின் பாடல், நடன, அறிவிப்புப் தொடர்பான ஆற்றல், திறன், நிபுணத்துவங்களை வெளிப்படுத்த வளவாளர்களால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இசையினுடனான இந்த நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டிற்கு அனைத்துப் பீட மாணவர் ஒன்றியம் முழு ஒத்துழைப்பினை வழங்கித் தமது பங்களிப்பினைச் செய்துள்ளன. 

நுண்கலைத்துறையின் தலைவர் திரு சு.சந்திரகுமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்குப்பல்கலைக்கழக பதில் மற்றும் பிரதி உபவேந்தர் வைத்தியக் கலாநிதி ஏ.ஜெ கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும், திருகோணமலை வளாகத் தலைவர் கலாநிதி வி.கனகசிங்கம் அவர்களும், கலைகலாசார பீட பீடாதிபதி திரு.மு.ரவி அவர்களும், வர்த்தக முகாமைத்துவப் பீட பீடாதிபதி கலாநிதி திருமதி வி.ராகல் அவர்களும், கௌரவக் கலைஞர் திரு.ரி.மசூர்தீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் மாணவர்களுக்கான படைப்பாக்க நல்லிணக்க இசைத் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர். 

இந்த இசை நிகழ்வில் மாணவர்கள் 32க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியும் 10க்கு மேற்பட்ட நடனங்களை நிகழ்த்தியும் தமது கலையாக்க ஆளுமையை வெளிப்படுத்திருந்தனர்.

இதற்கான பயிற்சிக் காலம் ஏழு நாட்களாகும். பல்கலைக்கழக மாணவர்களே அறிவிப்பாளர்களாக ஈடுபட்டுத் தமது திறனை வெளிப்படுத்தினர். பல்கலைக்கழக அனைத்துப் பீடத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கிய சமூக மாணவர்கள் இன,மத,பீட  வேறுபாடு இன்றி வித்தியாசங்களை மதித்துத் தமது ஆற்றலால் ஒன்றிணைந்தமை வரலாற்றுச் சிறப்பாகும். ஒழுங்கமைப்பாளரின் திட்டமிடலும் வழிநடத்தலும்  மாணவர் மையப்படுத்தலும் மாணவர்களை முழுமையாக ஈடுபட வைத்தமை வெளிப்பட்டது. பல்கலைக்கழகம் மனிதர்களை அறிவு, ஆற்றல், ஆளுமை உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்குவதே உலகத் தரமாகும். இதுவே அனைத்துப் பேதங்களையும் நீக்கிவிடும்.

Add caption

Add caption
Add caption