மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 12வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை நிகழ்வின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 12வது ஆண்டு நினைவுதினம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் உட்பட முன்னாள்மாகாணசபை உறுப்பினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் ஏ.தேவராஜா மற்றும் வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ந.முரசொலிமாறக்குருக்கள் ஆகியோர் ஆத்மசாந்தியுரை நிகழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் முன்னுரை நிகழ்த்தியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நினைவுப்பேருரையாற்றினார்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையினால் “காலத்தைவென்று வாழும் மனிதவுரிமைகள் காவலன்” என்னும் சிற்றிதழும் வெளியிட்டுவைக்கப்பட்டது.