எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்தறியும் செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

எல்லை நிர்ணய சபை மற்றும் இலங்கை தேர்தல் திணைக்களம் என்பன இணைந்து இந்த செயலமர்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் சுசிலன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் எல்லை நிர்ணய சபையின் தவிசாளர் கலாநிதி கே.தவலிங்கம்,இலங்கை தேர்தல் திணைக்களத்தின் பிரதி ஆணையாளரும் எல்லை நிர்ணய சபையின் செயலாளருமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க உட்பட எல்லை நிர்ணய சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சி,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் பள்ளிவாயல்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

தனித்தனியானமுறையில் இதன்போது கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களையொட்டி எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலும் அரசியல்கட்சிகள் பொதுமக்களின் கருத்துகளைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.