கஞ்சா கடத்திய மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் கைது

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராம் கேரளக் கஞ்சாவை கடத்திய மதுவரி திணைக்கள அதிகாரியொருவர், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்னவின் பணிப்புரையின் பேரில்  நேற்று பிற்பகல் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ஊர் வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் மூலம் பாடசாலை பையினுள் வைத்து, குறித்த கேரளக் கஞ்சாவைக் கடத்தி வந்தபோது,  மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.பீ.றோகன தலைமையாலான பொலிஸ் குழுவினரால், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் (வயது 25), மதுவரி திணைக்கள மட்டக்களப்பு தலைமையத்தில் பணிபுரிபவர் என்பது குறிப்பித்தக்கது.

கைதான அந்நபரிடமிருந்து ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, தாம் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் சட்ட விரோத சாராயம், போதைப்பொருள்கள் பயன்பாடு, விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனைத் தடுப்புப் போன்ற கடமைகளுக்காக உள்ளவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.