யுத்ததின் பின் கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தாமையே சீரழிவுக்கு காரணம் -வியாழேந்திரன் எம்.பி

யுத்தத்தின் பின்பு கிடைத்த சுதந்திரத்தை வடகிழக்கில் உள்ள இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்த தவறியமையே இன்று இங்குள்ள சீரழிவுகளுக்கு காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கடந்தகாலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையினால் பல பாதிப்புகளை மாணவர்கள் எதிர்கொண்ட நிலையில் இந்த வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு குட் சேர்பட் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் வருட இறுதிவருட நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் குட் சேர்பட் சர்வதேச பாடசாலையின் அதிபர் திருமதி ஜோன் என் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

இதன்போது சின்னஞ்சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் காண்போரை வெகுவாக கவரும் வகையில் இருந்தன.

அத்துடன் இந்த ஆண்டு சிறப்பாக செயற்பட்ட மாணவர்களும் அதிதிகளினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

மூன்று தசாப்த காலங்களாக எமது மண்ணில் யுத்தம் நடந்தபோது எமது தமிழ் மக்களின் கல்வி மிக உயர் நிலையில் இருந்தது. 2009ஆம் ஆண்டு மேமாதம் 18ஆம் திகதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் கல்வி நிலை தலைகீழாக மாறியிருக்கின்றது.

இறுதியாக வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் முடிவுகளின் பிரகாரம் இலங்கையில் இருக்கின்ற ஒன்பது மாகாணங்களில் கடைசி மாகாணமாக வடமாகாணம் இருக்கின்றது. கடைசிக்கு முதல் மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் பிரகாரம் கடைசி மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது. கடைசிக்கு முதல் மாகாணமாக வடமாகாணம் இருக்கின்றது. யுத்தத்தின் பின்பு வடக்கு,கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை மிக மோசமடைந்திருக்கின்றது. அதற்கு காரணம் யுத்தத்தின் பின்பு கிடைத்த சுதந்திரத்தை எங்களுடைய இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்த தவறியமையாகும்.

வடமாகாணத்தில் வாள்வெட்டுகளும் ஆவா குழுக்களும் என்ற நிலையில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற பல இளைஞர்களை நாங்கள் பார்க்கின்றோம். இங்குகூட இலத்திரனியல் ஊடகங்கள், முகநூல் பாவனைகளில் அதிகளவில் ஈடுபட்டு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தங்களுடைய வாழ்நாளை அத்தகைய விடயங்களில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்ற நிலைமை வடகிழக்கு மாகாணங்களில் இருக்கின்றது. இந்த நிலைமை எங்களை முழுமையாக பாதித்திருக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் நாங்கள் எங்களுடைய கல்வி நிலையால் முழு இலங்கையையும் ஆண்டோம். அனைத்து பரீட்சைகளிலும் சித்தியடைந்து அனைத்து துறைகளிலும் உயர் நிலையில் இருந்தோம். ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது. நாங்கள் கல்வியால் வளர்ந்த சமூகமாவோம்.கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாவோம். நாம் மீண்டும் அந்த நிலைக்கு வரவேண்டும்.

நாங்கள் எங்களுக்கான நிரந்தர தீர்வொன்றை பெறவேண்டுமானால் இரண்டு விடயங்களில் நாங்கள் முன்னேற வேண்டும்.இல்லாவிட்டால் தீர்வு அசாத்தியமாகும். பொருளாதாரம் மற்றும் கல்வியில் எமது சமூகத்தை நாங்கள் எந்தளவிற்கு உயர் நிலைக்கு வளர்த்தெடுக்கின்றோமோ அந்த நிலையில்தான் இந்த நாட்டில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
 
பெற்றோர்கள் கல்விக்கூடாக தங்களுடைய  பிள்ளைகளை வளர்க்க வேண்டும். கல்விக்கூடாக எங்களுடைய இருப்பை இந்த நாட்டில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகமான சகோதர சிங்கள சமூகம் எஙடகளை மதிக்க வேண்டும், இணையாக எங்களை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். கல்விக்கூடாகவும் பொருளாதாரத்தினூடாகவும் எங்களுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ளும்போது அந்த சமத்துவம் தானாகவே வந்து சேரும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 130770மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். 362பாடசாலைகள் இங்கிருக்கின்றன. 10 தேசிய பாடசாலைகளும் 11 1ஏபி பாடசாலைகளும் இதில் அடங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ள பேராபத்து 105பாடசாலைகள் இன்னும் பத்து வருடங்களில் மூடப்படுகின்ற அபாய நிலையில் இருக்கின்றது. அதை நாங்கள் இழந்துவிடக்கூடாது.

நீங்கள் செல்கின் பாதையில் பிரச்சனைகளும் சவால்களும் இருந்தால்தான் அது சரியான பாதையாகும். ஆகவே கல்விக்கூடாகவே ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும். மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம். உரிய வயதில் உரிய கல்வியை கொடுக்க வேண்டும்.

இலங்கையின் கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய சரியான கல்விக் கொள்கை இல்லை. எத்தனையோ பட்டதாரிகள் படிப்பை முடித்துவிட்டு வீதிகளில் இருக்கின்ற நிலைமை இருக்கின்றது. அதற்கு காரணம் பிள்ளைகளல்ல.

இலங்கையின் கல்விக் கொள்கை மாற்றப்பட வேண்டும். இதுதொடர்பில் நாங்கள் பாராளுமன்றத்தில் பல விவாதங்களை முன்னெடுக்கின்றோம். அதனால்தான் அரசாங்கம் Nஏஞ என்ற கல்வி முறைமையை கொண்டுவந்திருக்கின்றது. இது ஒரு தொழினுட்ப கற்கையாகும். இது ஏழு தரங்களை கொண்டிருக்கின்றது.

அரசாங்கம’ வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கின்ற வகையில் தனது கல்விக் கொள்கையை சற்று மாற்றியிருக்கின்றது. கணிதம்,விஞ்ஞானம்,கலை,வர்த்தகம் ஆகிய நான்னு துறைகளுக்கும் மேலாக ஐந்தாவதாக தொழினுட்பம் என்ற துறையை கொண்டுவந்திருக்கின்றது.

2018ஆம் ஆண்டிலிருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஒருவர் சித்தியடையாவிட்டாலும் அவர் தொடர்ச்சியாக கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை  கற்க முடியும். அவர்களுக்கு Nஏஞ தரச்சான்றிதழ் வழங்கப்படவிருக்கின்றது.

தற்போது இலங்கையில் இருக்கின்ற 98கல்வி வலயங்கள் 200ஆக மாற்றியமைக்கப்பட இருக்கின்றன. இலங்கையில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களுக்கு 24000தொடக்கம் 26000வரையான மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றார்கள். 2019ஆம் ஆண்டிலிருந்து 50000மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவிருக்கின்றார்கள்.