மட்டக்களப்பில் தொங்கும் பதாகைகள்….

புதிதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்று
வருகைதரவுள்ள புதிய அரசாங்க அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் வாழ்த்து பதாகைகளை தொங்கவிட்டுள்ளது.

மட்டக்களப்பினை சேர்ந்த ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் இவ்வாறு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதை நாங்களும் வரவேற்கின்றோம்.அவருக்கு இந்த வாழ்த்து பதாகைகளை தொங்கவிட்டதில் எந்தவித மாற்றுக்கருத்துகளும் இல்லை.

ஆனால் இந்த வாழ்த்துகளை தொங்கவிட்டுள்ளவர்கள் உண்மையான அந்த பற்றுடன்தான் இந்த வாழ்த்துகளை தொங்கவிட்டுள்ளார்களா என்பதே இங்குள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு பெருமைகளையும் புகழையும் தேடித்தந்த எத்தனையோ வீரர்களும் புத்திஜீவிகளையும் இவர்கள் கண்டுகொள்ளவே இல்லாத நிலையில் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவதன் காரணம் என்ன?.

தேசிய மட்டத்தில் பல்வேறு சாதனைகளைப்படைத்து தங்க பதக்கங்களுடன் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விளையாட்டு வீரர்கள் வந்து இறங்கும்போது அவர்களின் பெற்றோரும் நண்பர்கள் மட்டுமே அவர்களை வரவேற்கும் நிலை இந்த மட்டக்களப்பில் இன்னும் இருந்துவருகின்றது.
மட்டக்களப்பில் எங்களை வரவேற்று வாழ்த்துவதற்கு யாரும் இங்கு இல்லையா என்னும் அவர்களின் மனவேதனையினை நான் ஒரு ஊடகவியலாளனாக பலசந்தர்ப்பங்களில் உணர்ந்தவனாகவும் இருந்திருக்கி;ன்றேன்.

சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த பலரை இங்குள்ளவர்கள் அறியவும் விரும்பாத நிலையில் இந்த புதிய அரசாங்க அதிபருக்கான பதாகைகளை தொங்கவிட்டவர்களின் நோக்கங்களை புரிந்துகொள்வதற்கு யாருக்கும் கடினம் இல்லை.

எனவே இவர்கள் தொடர்பில் புதிய அரசாங்க அதிபர் கவனத்தில்கொண்டு நடப்பார் என்று எதிர்பார்ப்பதுடன் எதிர்காலத்தில் இந்த மண்ணில் தொன்றும் சாதனை வீரர்கள் அனைவரையும் கௌரவிக்கவேண்டிய பொறுப்பு எமது மண்ணின் மைந்தர்களுக்கு உண்டு.

நன்றி,
மட்டு.நியுஸ்.ஆசிரியர்