வாழைச்சேனை பகுதியில் இனங்களிடையே முறுகல நிலை –பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

வாழைச்சேனை பகுதியில் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் அது தொடர்பான வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் தாக்கல்செய்யுமாறும் அதுவரையில் குறித்த பஸ் நிலையத்திற்கு சேதங்களை ஏற்படுத்த முனைந்தால் துப்பாக்கி சூடு நடாத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன்யட்டவர தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் இருக்குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதினால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிற இடங்களுக்கான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.

வாழைச்சேனை சந்தியில் அமைக்கப்படவுள்ள பஸ்தரிப்பிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் நிதியொதுக்கீட்டின் மூலம் இந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நேற்று அடிக்கல் நடப்பட்டு பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று காலை ஓட்டமாவடியை சேர்ந்த சில முச்சக்கர வண்டி சாரதிகள் குறித்த பஸ் நிலையத்திற்காக அமைக்கப்பட்ட பகுதியை மூடியதுடன் அப்பகுதியில் முச்சக்கர வண்டிகளையும் நிறுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் இது தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் வினவியபோது இருதரப்பினர்களிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளதுடன் தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி குறித்த முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன் அப்பகுதியில் இருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இரு இனங்களிடையே முறுகல் நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டதனால் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் வாழைச்சேனை பொலிஸாரும் பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் கடும் பதற்ற நிலைமை இருந்துவந்து.
அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன்யட்டவர,வாழைச்சேனை பொறுப்பதிகாரி ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டதனால் குறித்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் எந்தவித செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டாம் எனவும் அவ்வாறு செயற்பட்டால் துப்பாக்கிசூடு நடத்தப்படும் எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த பிரச்சினையை நீதிமன்றுக்கு கொண்டுசென்று தீர்வுகாணப்படும் எனவும் அதன் பிறகு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன்யட்டவர தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதயில் கூடி நின்றவர்கள் கலைந்து சென்றதுடன் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் நடைபெற்றுவருகின்றது.

இயல்புநிலையேற்படும் வரையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.